நம்மிடம் ஏதாவது பொருள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும் பட்சத்தில் அதன் மதிப்பு என்ன என்பது நாம் தெரியாமலே கடந்து போய் விடுவோம். இப்படி நம்மை சுற்றி இருக்கும் நிறைய பொருட்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி ஒரு சூழலில் தான் ஒரு காலத்தில் வெறும் 506 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஒரு மார்பிள் சிலையின் உண்மையான மதிப்பு பல ஆண்டுகளுக்கு பிறகு என்ன என்பது தெரிய வந்துள்ளது அனைவரையும் ஒரு நிமிடம் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
கடந்த 1930 ஆம் ஆண்டு முதல் ஸ்காட்லாந்தில் உள்ள Invergordon என்னும் பகுதியில் இருக்கும் மாநகர கவுன்சிலில் ஒரு ஆணின் மார்பிள் சிலை ஒன்று வெறும் 506 ரூபாய்க்கு வாங்கப்பட்டு அங்கே வைக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த மார்பிள் சிலை அங்கே இருந்து வந்த நிலையில் தான், அந்த இடம் இடித்து திரும்பவும் வடிவமைக்கப்பட்ட சமயத்தில் அந்த சிலை காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
300 வருட பின்னணி
இதனைத் தொடர்ந்து அதே இன்வர்கார்டன் பகுதியில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் கட்டிடம் ஒன்றில் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் Door Stop (கதவு சுவற்றில் இடிக்காமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருள்) ஆக பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் சமீபத்தில் தான் இந்த மார்பிள் சிலையின் 200 ஆண்டுகள் வரலாறு தெரிய வந்துள்ளது. கடந்த 1930 ஆம் ஆண்டில் வெறும் ஆறு டாலர்கள் மதிப்பில் (இந்திய மதிப்பில் 506 ரூபாய்) இது வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த மார்பிள் சிலை ஜான் கோர்டன் என்ற அரசியல்வாதியின் மார்பிள் சிற்பம் என்பதும், பிரபல பிரெஞ்சு சிற்ப கலைஞர் எட்மே பவுச்சர்டன் என்பவர் கடந்த 1728 ஆம் ஆண்டு இதை வடிவமைத்தார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு தான் ஸ்காட்லாந்தில் உள்ள கவுன்சில் மூலம் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏலத்தில் 27 கோடி ரூபாய்
கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த மார்பிள் சிலை பற்றி தகவல் தெரிய வந்த நிலையில், இதனை ஏலத்தில் விடவும் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தற்போது ஏலத்தில் விடவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இந்திய மதிப்பில் இந்த மார்பிள் சிலையின் விலை சுமார் 27 கோடி வரை இருக்கும் என்றும் தெரிகிறது.
ஒரு காலத்தில் 500 ரூபாய்க்கு வாங்கப்பட்ட மார்பிள் சிலை வீட்டின் கதவு சுவற்றில் மோதாமல் இருக்க தடுக்கப்பட்ட பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் அது கோடிக்கணக்கான மதிப்புள்ளது என்ற தகவல், பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.