இன்று நாம் நிகழ் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் பற்றியும் நாம் நிச்சயம் நிறைய விஷயங்களை நினைவு வைத்திருப்போம். அதே நேரத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்த உலகம் எப்படி இருந்தது என கேட்டால் தெளிவாக சொல்ல முடியாமல் வரலாற்று புத்தகங்கள் அல்லது தகவல்கள் மூலம் தெரிந்ததை சொல்வோம்.
அதில் உண்மை எது பொய் எது என்பதே மிகப்பெரிய புதிராக இருக்கும் சூழலில், சில ஆதாரங்கள் அல்லது அந்த காலத்தில் பயன்படுத்த பொருட்கள் கிடைக்கும் போது அது உண்மை என்பதும் தெரிய வரலாம். இதனிடையே தான் சுமார் 132 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் தொடர்பான செய்தி பலரையும் ஒருநிமிடம் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
132 வருடத்திற்கு முன் எழுதிய கடிதம்..
ஸ்காட்லாந்து நாட்டில் பல ஆண்டுகள் பழக்கமுள்ள ஒரு பெரிய கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. சுமார் 100 அடி உயரமுள்ள இந்த கலங்கரை விளக்கத்தில் தான் சமீபத்தில் ஒரு பாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த பாட்டிலுக்குள் ஒரு கடிதம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் அந்த கலங்கரை விளக்கத்தில் கான்க்ரீட் மூலம் பதியப்பட்டு பாட்டில் இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Corsewall என்ற கலங்கரை விளக்கத்தில் இந்த பாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இருந்த தகவல் மூலம் கடந்த 132 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1892 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. பறவை இறகு மற்றும் மை மூலம் இது எழுதப்பட்டுள்ளதும் தெரிய வந்த சூழலில், அந்த கலங்கரை விளக்கத்தை கட்டிய 3 பொறியாளர்கள் பெயர் அதில் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த கலங்கரை விளக்கத்தின் அப்போதைய 3 காவலாளிகள் பெயரும் இடம்பெற்றுள்ளது.
வரலாற்று பொக்கிஷம் ஆச்சே
அந்த கலங்கரை விளக்கத்தில் மெக்கானிக்கல் என்ஜினியராக அடிக்கடி ஆய்வுகளை மேற்கொள்ளும் ரோஸ் ரசல் (Ross Russell) என்பவர் இந்த 8 இன்ச் நீளமுள்ள பாட்டிலை கண்டுபிடித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. முன்னதாக அங்கிருந்த அலமாரி ஒன்றின் பின்னால் இது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை எடுக்க றோஸ் ரசல் உள்ளிட்ட பலரும் கொஞ்சம் சிரமப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அது மட்டுமில்லாமல், பாட்டிலின் மூடியை திறக்கவும் சிரமப்பட்ட அவர்கள், பெரிதாக இருந்த காகித குறிப்பையும் எந்தவித சேதமும் இல்லாமல் எடுக்கவும் நிறைய நேரம் எடுத்துக் கொண்டுள்ளனர். தொடர்ந்து ரசல் அதனை எடுத்து படித்த பின்னர் விஷயமும் தெரிய வந்துள்ளது. இந்த தருணத்தை பற்றி சில கருத்துக்களை பகிர்ந்த அவர், ‘132 வருடங்களுக்கு பிறகு அந்த கடிதத்தை தொட்ட முதல் ஆள் நான் தான்’ என்றும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
132 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட காகிதம் ஒன்று தற்போது கிடைத்துள்ள தகவல், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.