என்ன தான் இந்த உலகம் பல இடங்களில் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதைத்தாண்டி நிறைய இடங்களில் மர்மமான விஷயங்கள் என்றென்றைக்கும் வெளியே வராத அளவுக்கு மறைந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படியான ஒரு பாலத்தைப் பற்றியும், அங்கே பாலத்தில் ஒரு நாய் சென்றாலே உடனடியாக அங்கிருந்து குதித்து கீழே விழுந்து விடும் என்ற அதிர்ச்சியான பின்னணியை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம்.
ஸ்காட்லாந்து நாட்டில் டாபர்டன் (Daburton) என்னும் பகுதியில் அமைந்துள்ள ஓவர்டன் பாலம் (Overtoun Bridge) தான் அனைவரையும் திகிலூட்டும் வகையில் அமைந்துள்ளது. இந்த பாலம் நாய்கள் தற்கொலை செய்து கொள்ளும் பாலம் என்றும் குறிப்பிட்டப்பட்டு வரும் நிலையில், அங்கே பல விசித்திரமான சம்பவங்களும் அரங்கேறி வந்துள்ளது.
நாய்களுக்கு ஆபத்தான பாலம்
ஓவர்டன் பிரிட்ஜ் எனப்படும் இங்கே பலரும் நாய்களை அழைத்துக் கொண்டு வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்படி அவர்கள் அழைத்துக் கொண்டு செல்லும் சமயத்தில் திடீரென அந்த நாய்கள் அந்த பாலத்தில் இருந்து எட்டிப் பார்த்துவிட்டு கீழே குதிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. சுமார் 600 நாய்களுக்கு மேல் அந்த பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ள நிலையில் பல நாய்கள் காயமடைந்து மெல்ல மெல்ல மீண்டும் வந்துள்ளது.
ஆனால் இன்னொரு பக்கம் 50 முதல் 100 நாய்கள் வரையில் அந்த பாலத்தில் இருந்து கீழே குதித்ததால் இறந்து போனதாகவும் தகவல்கள் கூறுகின்றது. அது மட்டுமில்லாமல் இந்த பாலத்தின் உயரம் சுமார் 50 அடி வரை இருப்பதால் பெரும்பாலான நாய்கள் கீழே விழுந்தாலே உயிர் தப்பிப்பது குறைவான வாய்ப்பாக தான் இருக்கும்.
இன்னும் விலகாத மர்மம்
கடந்த பல ஆண்டுகளில் இந்த விசித்திர சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தான் அப்பகுதி மக்கள் அந்த பாலம் நாய்களின் பெயரில் சபிக்கப்பட்டதாகவும் அங்கிருந்து இறந்த பெண் ஒருவர் தான் இப்படி எல்லாம் செய்கிறார் என்றும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அந்த இடத்தில் சென்று ஆராய்ச்சி நடத்திய நபர்கள் தெரிவிக்கும் தகவலின் படி, அந்த பாலத்திற்கு அடியில் ஏதோ காட்டில் இருக்கும் உயிரினத்தின் கழிவுகளின் வாசனை தான் நாயை அங்கே வர வைக்க தூண்டுவதாகவும் கூறப்படுகிறது.
பாலத்தில் இருந்து பார்க்கும் போது அந்தப் பக்கம் குழி இருப்பது தெரியாது என்பதால் உயரம் தெரியாமல் காயமடைந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் மர்மமான விஷயங்களை ஆய்வாளர்கள் நம்ப மறுத்தாலும் அவர்கள் தெரிவிக்கும் கருத்தையும் உறுதிப்படுத்துவதற்கான சாட்சிகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது.
கடந்த 1950 முதல் 2000 வரை பல நாய்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இன்னும் இதற்கான காரணம் மர்மமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.