இந்த உலகில் சில நோய்கள் அல்லது மக்களுக்கு உள்ள பிரச்சனைகள் தொடர்பான அறிகுறிகள் பொதுவானதாக இருக்கும். ஆனால் இன்னொரு பக்கம் இப்படியும் சில பேருக்கு பிரச்சனைகள் இருக்குமா என ஒருவித வினோதத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தான், தற்போது ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நரம்பியல் தொடர்பான பிரச்சனை பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.
US பகுதியை சேர்ந்தவர் தான் சாரா கென் (Sarah Gann). இவருக்கு தற்போது 30 வயதாகும் சூழலில் ஒரு வித்தியாசமான பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். பொதுவாக ஒரு உணவை உட்கொள்ளும் போது தான் நம்மால் அதன் சுவையை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், ஒருவரின் பெயர் அல்லது வார்த்தைகளை படித்தாலோ அல்லது கேட்டாலோ அதனை சுவையுடன் தொடர்புபடுத்தி கொள்வதுடன் அதை உணர முடியும் நிலை தான் சாராவுக்கு உள்ளது.
உதாரணத்திற்கு இவரது காதலனான ஜேக்கப் க்ளைடனின் பெயரை கேட்கும் போது பேப்பரின் சுவை போன்று இருப்பதாகவும், நீலம் என்ற வார்த்தை சாக்லேட்டின் சுவையை உணர வைப்பதாகவும் சாரா குறிப்பிட்டுள்ளார். அனைத்து வார்த்தைகளுக்கும் சுவையுடன் சாராவால் தொடர்புபடுத்தி பார்க்க முடியவில்லை என்றாலும் சில பொதுவான வார்த்தைகள் ஏதாவது ஒரு உணவு பொருளின் சுவையை தான் உணர வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் சாரா, இது பற்றி முதலில் தனது தோழியிடம் தெரிவிக்கும் போது அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. உடல் ரீதியாக நாக்கின் மூலம் சுவையை உணர முடியவில்லை என்றாலும் பெயரை கேட்டதும் அவரது வாயில் அதன் கற்பனை உடனடியாக எட்டி விடுமாம்.
தான் சொல்வதை விட மற்றவர்கள் சில வார்த்தைகளை சொல்லும் போது அவை இன்னும் நெருக்கமாக சுவையை உணர வைப்பதாகவும், மேலும் எழுதும் போது கூட அதனை அவரால் உணர முடியும் என்றும் தகவல்கள் கூறுகின்றது. அதே போல, சாராவை நாடும் பலரும் தங்களின் பெயர் எந்த சுவையை உணர வைக்கின்றது என்பதை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.
மேலும் சாராவுக்கு அதிகம் பிடித்த வார்த்தையாக பிராண்டன் (Brandon) உள்ளது. இதனை கேட்கும் போது சாக்லேட் கேண்டி பாரின் சுவையை உணர வைப்பதால் அது தனது ஃபேவரைட் வார்த்தை என்றும் அவர் கூறி உள்ளார். தனது குழந்தைகள் பெயர் என பலவற்றிற்கும் சுவையை உணர முடியும் சாராவிடம் இதில் ஒரு சிறப்பம்சமான விஷயமும் உள்ளது.
பால் என்றால் சாராவுக்கு பிடிக்காதாம். கடிகாரம் என்ற வார்த்தையை கேட்கும் போது பாலின் சுவை உணர்வை அவை கொடுப்பதால் சாராவுக்கு அது பிடித்தமான வார்த்தையாக இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றது.