ரஷ்ய வரலாற்றில் இதுவரை இல்லாத மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்று, இன்று அதிகாலை கம்சட்கா தீபகற்பத்தில் நிகழ்ந்த நிலையில் ரஷ்யாவே குலுங்கியது. ஆனால், இந்த ஒரு இக்கட்டான நேரத்தில் கூட அறுவை சிகிச்சை அறையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரு நுட்பமான அறுவை சிகிச்சையை பாதியில் கைவிட மறுத்து தொடர்ந்து தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்று அதிகாலை வேளையில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம், பசிபிக் பெருங்கடலில் சுனாமி அலைகளை அனுப்பியது. இதனால் குறைந்த மக்கள்தொகை கொண்ட அந்த தீபகற்பத்தில் பரவலான பீதி ஏற்பட்டது. இந்த நிலையில் இதே பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையின் உள்ளே, மருத்துவர்கள் குழு ஒன்று புற்றுநோயாளிக்கு ஒரு முக்கிய அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தனர். நிலநடுக்கத்தால் அறுவை சிகிச்சை படுக்கை குலுங்கியது. அறுவை சிகிச்சை கருவிகள் தட்டுகளில் இருந்து நழுவின. விளக்குகள் மினுமினுத்தன. ஆனாலும், அறுவை சிகிச்சை நிபுணர்கள் நோயாளியை விட்டு ஒருபோதும் நகரவில்லை. அவர்கள் அறுவை சிகிச்சையை நிறுத்தவும் இல்லை, அறையை விட்டு வெளியேறவும் இல்லை.
ரஷ்ய அரசுக்கு சொந்தமான ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனம் வெளியிட்ட இந்த காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, மருத்துவர்கள் குழுவின் அர்ப்பணிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாகவும், நோயாளி தற்போது குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://x.com/Revolution_Eyez/status/1950427592537903117
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
