ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போன பிரபலத்தின் ஷூ.. அப்படி என்னங்க ஸ்பெஷல் இதுல..

By Ajith V

Published:

பொதுவாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு நபர் மறைந்து போகும் பட்சத்தில் அவர் பயன்படுத்திய பொருட்களுக்கு எப்போதுமே மவுசு இருந்து கொண்டே தான் இருக்கும். மேலும் சில ஏல நிகழ்வுகளில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று அவர்களின் உடை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அதன் மூலம் விற்கப்படுவது வழக்கமான ஒரு நடைமுறையாகும்.

இதை வாங்கும் நபர்கள், அந்த பிரபலத்தின் மீது ஈர்ப்பால் வாங்குகிறார்கள் என்பதை தாண்டி அவர் பயன்படுத்திய பொருள் எப்போதைக்கும் தங்கள் கையில் இருந்து கொண்டே இருக்கும் என்றும் மற்றவர்கள் மத்தியில் அது ஒரு பெரிய செல்வாக்காக இருக்கும் என்பதற்காகவே வாங்கி கொள்கின்றனர். அதுவும் சாதாரண ரசிகர்களால் அந்த பொருட்களை சொந்தம் கொள்ள முடியாது என்ற சூழலில், ஒரு சட்டை அல்லது கண்ணாடிக்கே பல லட்சங்கள், கோடிகள் வரை செலவு செய்யும் ரசிகர்கள் தான் அதிகம் இருக்கின்றனர்.

அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் ஒரு பிரபலம் பயன்படுத்திய ஷூ ஒன்று, ஏலத்தில் போன விலை பலரையும் ஒரு நிமிடம் அதிர வைத்துள்ளது. 1950 களில் பிரபலமான இசைக் கலைஞர் மற்றும் நடிகராக இருந்தவர் தான் எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி. இவர் பிரபலமான இசைக் கலைஞராக ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்ததுடன் இவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் அதிகமாக இருந்தது.

மேலும் அந்த காலத்தில் ராக் அண்ட் ரோலின் மன்னன் என்ற பெயரும் அவருக்கு இருந்துள்ளது. இதனிடையே, கடந்த 1977 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் எல்விஸ் பிரெஸ்லி காலமாகி உள்ளார். அவரது மறைவு, எல்விஸ் ரசிகர்களை மனம் நொறுங்க வைத்திருக்க, அவரது பாடல்கள் என்றென்றைக்கும் அவர்கள் மனதில் நிலைத்து நிற்கும் என்றும் தெரிகிறது.

இதனிடையே, எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி, கடந்த 1950 களில் மேடையேறி பாடல்கள் பாடிய போது ஊதா நிற காலணி ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார். முன்னதாக, எல்விஸ் பிரெஸ்லியின் உடைகள், அணிகலன்கள் உள்ளிட்ட பல பொருட்கள் ஏலத்திற்கு விலை போய் வருகிறது. அப்படி ஒரு சூழலில், அவரது ஊதா நிற காலணியும் சமீபத்தில் ஏலத்தில் வந்துள்ளது.

இதனை ரசிகர்கள் வாங்கிய விலை தான் தற்போது அனைவரையும் மலைக்க வைத்துள்ளது. 152000 அமெரிக்க டாலர் மதிப்பில் அவரது தீவிர ரசிகர் இதனை வாங்கி உள்ளார். இந்திய மதிப்பில் 1.25 கோடி ரூபாய் வரை இருக்கும் சூழலில், தான் ராணுவத்தில் சேருவதற்கு முன்பாக தனது நண்பரிடம் இந்த ஷூவை எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி கொடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இனிமேல் 70 ஆண்டுகள் பழமையான இந்த ஷூவை பயன்படுத்துவது அரிதான காரியம் என்றாலும், எல்விஸ் ஞாபகார்த்தமாக பல கோடி ரூபாய் கொடுத்து ரசிகர் இதனை வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.