டீ குடிக்கவே EMI வாங்கணும் போல.. ஒரு லட்ச ரூபாய்க்கு டீயா.. அப்படி அதுல என்ன தான் ஸ்பெஷல்..

By Ajith V

Published:

இந்தியாவை நாம் எடுத்துக் கொண்டால் இங்கே தண்ணீர் குடிப்பதற்கு நிகராக டீயை காலை முதல் இரவு வரைக்கும் பலமுறை குடிக்கும் ஆட்கள் ஏராளமாக உள்ளனர். காலையில் எழுந்து கடன்கள் அனைத்தையும் முடித்துவிட்டு அந்த டீயை குடித்தால் மட்டும் தான் அவர்களுக்கு ஏதோ வாழ்க்கை புதிதாக தொடங்குவது போன்ற ஒரு உணர்வை கொடுக்கும். அதிலும் சில நபர்கள் எல்லாம் தண்ணீர் கிடைக்காமல் போனால் கூட பரவாயில்லை, டீ போதும் என்ற நிலைக்கும் தங்களது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள்.

இன்னும் சில இடங்களில் தனியாக வாழ்ந்து வரும் பேச்சுலர்களுக்கு மூன்று வேலை உணவாக இருப்பதும் டீ தான். தொடர்ச்சியாக டீ குடிப்பது சில பிரச்சனைகளை உருவாக்கும் என பலர் அறிவுறித்தினாலும் அதன் சுவையின் காரணமாக யாராலும் அதனை குறைக்கவும் முடிவதில்லை. இந்திய மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இந்த தேநீர் பார்க்கப்பட்டு வரும் நிலையில், கடைகளில் 10 முதல் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு டீ ஒரு லட்ச ரூபாயா..

அதே வேளையில் பெரிய ஹோட்டல்களில் 50 முதல் 100 ரூபாய் வரையிலும், 5 ஸ்டார் ஹோட்டல்களில் 700 முதல் 1000 ரூபாய் வரையிலும் தேநீரை இந்தியாவின் பல இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இப்படி பலரின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பங்குமாக இருக்கும் இந்த டீயை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி குடிக்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?.

நிஜத்தில் துபாயில் உள்ள எமிரேட்ஸ் பினான்சியல் டவரில் போகோ கஃபே (Boho Cafe) என்ற இடத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு டீ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோல்ட் காரக் (Gold Karak) எனப்படும் இந்த டீ, இந்திய மதிப்பில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதற்கு காரணம் அதில் தங்கம் சேர்க்கப்படுவது தான்.

EMI தான் வாங்கணும் போல..

முழுக்க முழுக்க வெள்ளியால் செய்யப்பட்ட கோப்பையில் தேநீரை வழங்கும் அந்த கஃபே, அதன் மீது தங்கத்தினால் ஆன ஒரு இலை போன்ற தாளையும் போடுகின்றனர். இது தவிர அங்கே வழங்கப்படும் தின்பண்டங்கள் மீதும் தங்கத்தின் துகள்கள் போடப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்பட்டு வருகிறது. அதே போல வெள்ளியால் கொடுக்கப்படும் அந்த கோப்பையையும் நாம் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் என்ற வசதியும் உள்ளது.

இது தொடர்பான செய்தியை பார்த்ததும் இந்தியர்கள் பலரும் ஒரு நிமிடம் வாயடைத்து போயுள்ளதுடன் மட்டுமில்லாமல் டீ குடிப்பதற்கே நாங்கள் EMI எடுக்க வேண்டும் என்றும் வேடிக்கையாக குறிப்பிட்டு வருகின்றனர். ஒரு பக்கம் வேடிக்கையாக இதனை கடந்து சென்றாலும் இன்னொரு பக்கம் டீயில் எதற்கு நாங்கள் தங்கத் துகள்களை சேர்த்து குடிக்க வேண்டும் என்றும் அப்படி என்ன அவசியம் வந்துவிட்டது என கஃபேவிற்கு எதிராகவும் நிறைய கருத்துக்களை எழுப்பி வருகின்றனர்.

சுசீதா சர்மா என்ற இந்திய வம்சாவளி பெண் ஒருவர் தான் இந்த டீக்கடையை துபாயில் திறந்துள்ளார். இது தொடர்பாக தற்போது பல விதமான கருத்துக்களும் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.