நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே.. நோபல் பரிசு என்ன, ஒரு வெங்கல கிண்ணம் கூட கிடையாது.. கையை விரித்த பரிசு குழுவினர்.. இந்தியா தான் காரணமா? டிரம்ப் அதிருப்தி..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நோபல் அமைதி பரிசு பெற வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். ஜனவரி மாதத்தில் வெள்ளை மாளிகைக்கு திரும்பியதில் இருந்து, தனது விருப்பத்தை அவர் வெளிப்படையாகவே தெரிவித்து…

trump nobel

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நோபல் அமைதி பரிசு பெற வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். ஜனவரி மாதத்தில் வெள்ளை மாளிகைக்கு திரும்பியதில் இருந்து, தனது விருப்பத்தை அவர் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார். ஆனால், நோபல் குழு அவருக்குப் பரிசு அளிக்க மறுப்பதாக தெரிகிறது. இது குறித்து, நோபல் குழுவின் செயலாளர் க்றிஸ்டியன் பெர்க் ஹ்வின், “பரிசுக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதில் ஊடகங்களின் ஆரவாரமோ, செல்வாக்கு மிக்கவர்களின் அழுத்தமோ எந்த வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஒவ்வொருவரும் தகுதியின் அடிப்படையிலேயே ஆராயப்படுவார்கள்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் ஏன் நோபல் பரிசுக்கு இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்? இதற்கான காரணம், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா. 2009-ல், ஒபாமா அதிபராக பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே நோபல் பரிசை வென்றார். இது பல விமர்சனங்களை சந்தித்தது, குறிப்பாக ட்ரம்ப் இதை மறக்கவில்லை. அதே அங்கீகாரம் தனக்கும் வேண்டும் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.

ட்ரம்ப் தனது சாதனையாக, “ஆறு போர்களை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக” மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஆனால், காசாவிலும் உக்ரைனிலும் இன்னும் சண்டைகள் நடந்து வருகின்றன. இது அவரது தேர்தல் வாக்குறுதியாகவும் இருந்தது. உலகமே இவ்வளவு பெரிய போர்களை கண்டுவரும் நிலையில், அவரது கூற்றுகள் நோபல் குழுவின் கவனத்தை பெறவில்லை. குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று பலமுறை டிரம்ப் கெஞ்சியபடி கூறினாலும் அதை இந்தியா உள்பட உலக நாடுகள் ஏற்கவில்லை.

இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அஜர்பைஜானின் இலாஹிம் அலி போன்ற உலக தலைவர்கள் அவரது பெயரை பரிந்துரைத்துள்ளதாக ட்ரம்ப் சுட்டிக்காட்டுகிறார். இது ஒரு வலிமையான ஆதரவு போல தோன்றலாம். ஆனால், இந்த ஆண்டுக்கான பரிந்துரைகள் ஜனவரி 31-ம் தேதியுடன் முடிந்துவிட்டன. ட்ரம்ப் பதவியேற்றது ஜனவரி 20-ம் தேதிதான். எனவே, கால தாமதமாக வந்த இந்த பரிந்துரைகள் இந்த ஆண்டுக்கான கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

உண்மையில், நோபல் பரிசுக்கு யாரை வேண்டுமானாலும் பரிந்துரைக்க முடியும். பல்கலைக்கழக பேராசிரியர்கள், அரசியல்வாதிகள் என ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு ஆண்டும் பெயர்களை பரிந்துரைக்கின்றனர். ஆனால், உண்மையான சாதனை, 338 நபர்கள் கொண்ட பட்டியலில் இருந்து இறுதியான ரகசிய பட்டியலுக்கு வந்து, அதன்பிறகு நோபல் பரிசை வெல்வதுதான். நோபல் குழு, ஊடக விளம்பரங்களையோ அல்லது பிரச்சாரங்களையோ கருத்தில் கொள்வதில்லை. ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படும். ஜூலை மாதம் நார்வேயின் நிதியமைச்சர் யென் ஸ்டோலன்பெர்க்குடன் பேசியபோது, ட்ரம்ப் நோபல் பரிசு குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

நோபல் குழுவின் சுதந்திரமான செயல்பாடுகள் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளன. 2010-ம் ஆண்டு, சீன அரசின் எதிர்ப்பாளராக கருதப்பட்ட லியோ ஷாபோ (Liu Xiaobo) என்பவருக்கு நோபல் அமைதி பரிசை வழங்கியது. இந்த முடிவு, சீனாவை கோபப்படுத்தியது.

நிபுணர்களின் கருத்துப்படி, ட்ரம்ப் அமெரிக்காவின் நலன்களை மட்டும் கருத்தில் கொண்டு “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” என்ற கொள்கையை முன்னெடுத்து வருகிறார். இது நோபல் பரிசின் நிறுவனர் ஆல்பிரட் நோபல் வலியுறுத்திய “பன்முகத்தன்மை” என்ற கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. எனவே, அவரது ஆக்ரோஷமான முயற்சி நோபல் குழுவில் பின்னடைவை மட்டுமே ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் மாதம், மூன்று நோபல் வரலாற்று ஆசிரியர்கள் ட்ரம்ப் இந்த பரிசுக்குத் தகுதியற்றவர் என்பதற்கான காரணங்களை வெளிப்படையாக பட்டியலிட்டனர். உக்ரைன் மீது மூன்று வருடங்களாக போர் தொடுத்து வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு ட்ரம்ப் ஆதரவு தெரிவிப்பது அவர்களது முக்கிய குற்றச்சாட்டுக்களில் ஒன்றாகும்.

அக்டோபர் 10-ம் தேதி இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு யாருக்கு என்பது தெரியவரும். வரலாறு, நோபல் குழுவின் சுதந்திரம், மற்றும் நிபுணர்களின் கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால், அதிபர் ட்ரம்ப் இந்த பரிசை வெல்வதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளன.