மாலத்தீவில் 10 நாட்கள் ஹனிமூன் கொண்டாட முன்பதிவு.. மூன்றே நாட்களில் தெறித்து ஓடிய புதுமண தம்பதி.. என்ன நடந்தது?

லண்டனை சேர்ந்த புதுமணத் தம்பதி, மாலத்தீவில் தேனிலவு கொண்டாட 10 நாட்கள் முன்பதிவு செய்திருந்த நிலையில், மூன்றே நாளில் அலறியடித்து கொண்டு தங்கள் திட்டத்தை முடித்துக் கொண்டு துபாய் சென்றதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை…

honeymoon

லண்டனை சேர்ந்த புதுமணத் தம்பதி, மாலத்தீவில் தேனிலவு கொண்டாட 10 நாட்கள் முன்பதிவு செய்திருந்த நிலையில், மூன்றே நாளில் அலறியடித்து கொண்டு தங்கள் திட்டத்தை முடித்துக் கொண்டு துபாய் சென்றதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலத்தீவு பயணத் திட்டம்
லண்டனை சேர்ந்த புதுமணத் தம்பதி சோஃபி மற்றும் அவரது கணவர், மாலத்தீவில் தேனிலவு கொண்டாட வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பே முடிவு செய்தனர். காதலிக்கும்போதே அவர்கள் மாலத்தீவுதான் ஹனிமூன் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டனர். இதனால், திருமணத்திற்கு முன்பே அவர்கள் சில மாதங்களுக்கு முன் மாலத்தீவு பயணத்தை திட்டமிட்டு, அதற்கான முன்பதிவு செய்தனர்.

குறிப்பாக, மாலத்தீவில் ஒரு புதிய தீவு திறக்கப்பட இருப்பதாகவும், ஜூலை மாதம் திறக்கப்படும் அந்தத் தீவுக்கு பயணம் செய்யும் புதுமணத் தம்பதிகளுக்கு சலுகை கிடைக்கும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட சோஃபி, அந்த தீவில் தனது ஹனிமூன் கொண்டாட திட்டமிட்டு, 10 நாட்கள் தங்க முன்பதிவு செய்தார். அந்தத் தீவில் ஏழு உணவகங்கள் இருக்கும் என்றும், இரண்டு தீவுகளை இணைக்கும் நடைபாதை உட்பட அனைத்து வேலைகளும் தயாராக இருக்கும் என்றும் உறுதி கூறப்பட்டிருந்தது.

ஏமாற்றமளித்த அனுபவம்
இந்த நிலையில், ஜூலை எட்டாம் தேதி சோஃபி, தன் கணவருடன் தேனிலவு கொண்டாடுவதற்காக மாலத்தீவுக்கு வந்தபோது பெரும் ஏமாற்றம்தான் காத்திருந்தது. ஒரு பக்கம் கட்டுமான பணிகள் முடியாமல், பணிகள் நடைபெறும் சத்தம் தொந்தரவை கொடுத்தது. அதுமட்டுமின்றி, அந்த தீவுக்கு வந்த முதல் விருந்தினர் மட்டுமல்லாமல், ஒரே விருந்தினர் தாங்கள்தான் என்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். “தீவில் நம்மை போலவே சில ஹனிமூன் ஜோடிகள் இருக்கும்” என்று ஆர்வத்துடன் வந்த சோஃபிக்கு, யாருமே இல்லாததை கண்டு ஒருவித பயமும் ஏற்பட்டது.

மேலும், ஏழு உணவகங்கள் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், அதில் நான்கு உணவகங்கள் திறக்கவே இல்லை என்று சொல்லப்பட்டது. ஒரு சில மெனுக்கள் மட்டுமே அனுப்பப்பட்டிருந்ததை பார்த்து அவர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனை அடுத்து, ஊழியர்களும் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்களுக்கு எப்படி வரவேற்க வேண்டும், எப்படி சேவை செய்ய வேண்டும் என்ற அனுபவம் இல்லை. இதனால், இந்த தம்பதிகள் தங்கள் தேனிலவை துபாய்க்கு மாற்ற முடிவு செய்தனர்.

பயணச் சேவை நிறுவனத்தின் நடவடிக்கை
இதனை அடுத்து, தாங்கள் புக் செய்த நிறுவனத்திடம் பேசி, துபாய்க்கு செல்ல இருப்பதாகக் கூறி, மீதமுள்ள நாட்களுக்கான பணத்தை திரும்பப் பெற்றனர். அதுமட்டுமின்றி, அந்த நிறுவனம் அந்த தம்பதிகளுக்கு வருத்தம் தெரிவித்து, மாலத்தீவில் இருந்து துபாய் செல்ல விமான டிக்கெட்டை தங்கள் செலவிலேயே எடுத்து கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆதரவு
சமூக வலைத்தளத்தில் இந்த சம்பவம் குறித்து சோஃபி பதிவு செய்துள்ள நிலையில், பலர் அவருக்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். “வேலை முடியும் முன்பே எப்படி முன்பதிவு செய்யலாம்?” என்றும், “ஹனிமூன் என்பது வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் வரும். அதையும் அந்த நிறுவனம் ஏமாற்றுவதற்கு உள்ளாகிவிட்டது” என்றும் பதிவிட்டு வருகின்றனர்