அமெரிக்காவில் குடிவரவு விதிகளில் மிக முக்கிய மாற்றம் ஒன்று வரவிருக்கிறது. இந்த மாற்றம், கிரீன் கார்டு யாருக்கு கிடைக்கும், யாருக்கு மறுக்கப்படும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மாற உள்ளது.
டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தால் ரகசியமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய முன்மொழிவு, சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் அரசாங்கத்தின் பொது உதவிகளை சார்ந்திருக்கக்கூடும் என்று அதிகாரிகள் கருதினால், அவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவதைக் கடினமாக்கும்.
ஒருவர் அமெரிக்காவில் அனுமதிக்கப்படுவாரா அல்லது தடுக்கப்படுவாரா என்பதை தீர்மானிக்கும் சக்தி வாய்ந்த நடவடிக்கையாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய விதியில் குடியேற்ற அதிகாரிகள் வயது, உடல்நலம், குடும்ப சூழல், கல்வி, திறமைகள், நிதி நிலைமை மற்றும் குறிப்பிட்ட பொதுப்பயன்களை பயன்படுத்துவது போன்ற காரணங்களை ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். இதில் க்ரீன் கார்டு பெற்றவர் அரசு உதவியை சார்ந்திருக்கிறாரா என்று முக்கியமாக பார்க்கப்படுகிறது.
முன்பு கணக்கில் கொள்ளப்படாத பல அரசாங்க சலுகைகள், இப்போது கிரீன் கார்டு விண்ணப்பத்தை பாதிக்கும் பட்டியலில் சேர்க்கப்படலாம். உதாரணமாக ஊட்டச்சத்து உதவி, வீட்டு வசதித் திட்டங்கள், குறிப்பிட்ட சுகாதாரப் பாதுகாப்பு உதவிகள் ஆகிய சலுகைகளுக்கு விண்ணப்பித்தாலோ, ஒப்புதல் பெற்றாலோ அல்லது பயன்படுத்தினாலோ, அது விண்ணப்பதாரருக்கு க்ரீன் கார்டை கேன்சல் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிகிறது.
புதிய விதியின் கீழ், அதிகாரிகளுக்கு ஒரு விண்ணப்பதாரரின் ஒட்டுமொத்த சூழ்நிலையை ஆராய்ந்து முடிவெடுக்க அதிக தனிப்பட்ட அதிகாரம் கிடைக்கும். குடும்பத்தின் உடல்நலம், பொருளாதாரப் பின்னணி, கடந்த கால சலுகை பயன்பாடு மற்றும் எதிர்காலத்தில் சார்ந்திருக்கக்கூடிய ஒட்டுமொத்த சாத்தியக்கூறுகள் ஆகியவை முடிவெடுப்பதில் தீர்க்கமான காரணங்களாக மாறும்.
நிரந்தரமாக வசிக்க விண்ணப்பிப்பவர்கள், தங்கள் குடியுரிமை நிலையை சரிசெய்து கிரீன் கார்டு பெற முயல்பவர்கள் ஆகியோரே இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குறைந்த அளவிலான மாற்றங்களே இருக்கும். ஆனால், புதிய விண்ணப்பதாரர்களுக்கு, குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட பின்னணியில் இருந்து வருபவர்களுக்கு, கிரீன் கார்டு பெறுவதற்கான தடைகள் இப்போது அதிகமாகியுள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
