என்னை கேட்காமல் நீ எப்படி வார்னர் பிரதர்ஸை வாங்குவ.. இந்த ஒப்பந்தத்தை நடக்க விடமாட்டேன்.. நெட்பிளிக்ஸ் மீது டிரம்ப் ஆவேசம்? தொழில்சங்கங்களும் கடும் எதிர்ப்பு.. ஒட்டுமொத்த ஹாலிவுட் சினிமா துறையை ஒரே ஒரு நிறுவனம் கட்டுப்படுத்துவதா? நீதித்துறையும் தலையிடுகிறது.. ரூ.6 லட்சம் கோடி ஒப்பந்தம் அவ்வளவு எளிது இல்லையா?

உலக அளவில் ஸ்ட்ரீமிங் சேவைகளில் முன்னணியில் இருக்கும் நெட்ஃபிக்ஸ், ஹாலிவுட்டின் மிக பழமையான மற்றும் மதிப்புமிக்க ஸ்டுடியோக்களில் ஒன்றான வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியை இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 லட்சம் கோடி கொடுத்து கையகப்படுத்த…

netflix warner

உலக அளவில் ஸ்ட்ரீமிங் சேவைகளில் முன்னணியில் இருக்கும் நெட்ஃபிக்ஸ், ஹாலிவுட்டின் மிக பழமையான மற்றும் மதிப்புமிக்க ஸ்டுடியோக்களில் ஒன்றான வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியை இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 லட்சம் கோடி கொடுத்து கையகப்படுத்த முடிவெடுத்துள்ளது. இந்த மெகா ஒப்பந்தம் தற்போது அமெரிக்காவின் அரசியல் மற்றும் ஒழுங்குமுறை கண்காணிப்பின் கீழ் சிக்கியுள்ளது.

இந்த ஒப்பந்தம் ஒரு பிரச்சனையாக இருக்கலாம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்திருப்பதன் மூலம், இந்த மெகா இணைப்பு சாதாரணமானதாக இருக்காது என்பது உறுதியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை அனுமதிப்பதா இல்லையா என்பதை தனது நிர்வாகமே முடிவு செய்யும் என்றும் டிரம்ப் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

இந்த இணைப்பு குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், “இது ஒரு செயல்முறை மூலம் செல்ல வேண்டும், என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நெட்ஃபிக்ஸ் ஒரு சிறந்த நிறுவனம். அவர்கள் அபாரமான வேலையை செய்திருக்கிறார்கள். நெட்ஃபிக்ஸ் இணை நிறுவனர் டெட்டும் ஒரு அற்புதமான மனிதர், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், இது சந்தை பங்கில் ஒரு பெரிய அளவு. எனவே, என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் கூட்டாட்சி சட்டங்களை மீறி, ஒரு நிறுவனம் ஒட்டுமொத்த ஸ்ட்ரீமிங் சந்தையிலும் ஆதிக்கம் செலுத்த வழிவகுக்குமா என்பதை தீர்மானிக்க, அமெரிக்க நீதித் துறையின் ஒழுங்குமுறைப் பிரிவு இந்த ஒப்பந்தத்தை வரிக்கு வரி ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே உலகளவில் ஸ்ட்ரீமிங்கில் முன்னணியில் இருக்கும் நெட்ஃபிக்ஸ், வார்னர் பிரதர்ஸை வாங்குவதன் மூலம், HBO, DC ஸ்டுடியோஸ், ஹாரி பாட்டர் போன்ற ஹாலிவுட்டின் மிகவும் மதிப்புமிக்க உரிமைகளை தனது வசப்படுத்தி கொள்ளும். வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதலில் ஸ்கை டான்ஸ் , காம்காஸ்ட் மற்றும் பாரமவுண்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களின் போட்டியை தாண்டி, இறுதியில் நெட்ஃபிக்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இந்த மெகா ஒப்பந்தம் முழு திரைப்பட மற்றும் ஸ்ட்ரீமிங் துறையின் எதிர்கால போக்கையே மாற்றியமைக்கும் திறன் கொண்டது என்பதால், ஒழுங்குமுறை கண்காணிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த இணைப்புக்கு எதிராக திரைத்துறையின் தொழிற்சங்கங்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளன. அமெரிக்க எழுத்தாளர் சங்கத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பிரிவுகள், இந்த இணைப்புக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று ஒழுங்குமுறை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளன. அவர்களின் வாதப்படி, நெட்ஃபிக்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் இணைந்த நிறுவனம் வேலைவாய்ப்புகளை குறைக்கும், பொழுதுபோக்குத் துறை ஊழியர்களின் ஊதியத்தை குறைக்கும், நுகர்வோருக்கான விலைகளை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். உலகின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனம் அதன் மிகப்பெரிய போட்டியாளர்களில் ஒருவரை கையகப்படுத்துவதை தடுக்கவே ஒழுங்குமுறைச் சட்டங்கள் வடிவமைக்கப்பட்ட நிலையில் இந்த இணைப்பை எப்படி அனுமதிக்கலாம் என்றும் தொழிற்சங்கங்கள் வாதிடுகின்றன.

இந்த விமர்சனங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், டிரம்ப் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். “இந்த ஒப்பந்தம் நெட்ஃபிக்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சந்தைப் பங்கை கொடுக்கிறது, இது ஒரு பிரச்சனையாகலாம்” என்று அவர் மீண்டும் கூறியுள்ளார். ஒரு பெரிய சந்தை ஆதிக்கத்தை கொண்ட ஒரு நிறுவனம், போட்டியை குறைத்து, நன்னிமித்தமான வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட வாய்ப்புள்ளது என்பதால், நீதித்துறையும் இந்த ஒப்பந்தத்தின் மீதான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

மொத்தத்தில், நெட்ஃபிக்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் இடையேயான இந்த சுமார் ரூ.6 லட்சம் கோடி ஒப்பந்தம், வெறும் வணிக பரிமாற்றம் மட்டுமல்ல. இது அமெரிக்காவின் ஒழுங்குமுறை கொள்கைகள், வேலைவாய்ப்பு சந்தை மற்றும் வாடிக்கையாளர் நலன்கள் ஆகியவற்றை தொடும் ஒரு முக்கிய அரசியல் மற்றும் சட்ட போராட்டமாக உருவெடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகம் இதில் நேரடியாக தலையிட போவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த மெகா இணைப்புக்கு தடை விதிக்கப்படுமா அல்லது நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.