அமெரிக்கா முழுவதும் தாய்ப்பால் கொடுக்கும் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதிகப்படியான தாய்ப்பாலை வருமான ஆதாரமாக மாற்றும் அமெரிக்க தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக முன்னணி ஊடகம் தெரிவிக்கிறது. நெறிப்படுத்தப்படாத ஆன்லைன் தளங்கள் மூலம் தாய்ப்பாலை விற்பனை செய்வதன் மூலம் சில பெண்கள் மாதத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சம் வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
வளர்ந்து வரும் முறைசாரா வர்த்தகம்:
சுகாதார பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், குழந்தை உணவுப்பொருட்கள் மீதான சந்தேகம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தாய்ப்பால் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்கள் இப்போது சர்வ சாதாரணமாக ஆன்லைனில் தாய்ப்பாலை வாங்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். பல தாய்மார்கள் இதை ஒரு முழு நேர தொழிலாகவோ அல்லது பகுதி நேர தொழிலாகவோ மாற்றிவிட்டனர்.
மினசோட்டாவை சேர்ந்த 33 வயது ஆசிரியரும், ஐந்து குழந்தைகளின் தாயுமான எமிலி எஞ்சர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “ஒவ்வொரு முறையும் ஒரு பக்கத்தில் எட்டு முதல் பத்து அவுன்ஸ் வரை தாய்ப்பாலை பம்ப் செய்வேன்,” என்று கூறியுள்ளார். அதாவது ஒரு நாளைக்கு 10 முறை பம்க் செய்தால் சுமார்100 அவுன்ஸ் கிடைக்கும் என்றும், அவர் தனது சொந்த குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பத்துக்கும் மேற்பட்ட மற்ற குழந்தைகளுக்கும் பால் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஃபார்முலா பால் நெருக்கடியின் தாக்கம்:
2022ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு முக்கிய நியூட்ரிஷன் தொழிற்சாலை சுகாதார காரணங்களால் மூடப்பட்டதால், பல பெற்றோர்கள் குழந்தை உணவு பொருட்கள் கிடைக்காமல் தவித்தனர். அப்போது தான் 33,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட “தாய்ப்பால் கம்யூனிட்டி போன்ற ஃபேஸ்புக் குழுக்கள் உருவாகி தாய்ப்பால் விற்பனை தொடங்கியது. முதலில் தாய்ப்பால் கொடுப்பது ஒரு சேவையாக கருதப்பட்ட நிலையில் அதன்பின் இது ஒரு தொழிலாக மாறிவிட்டது.
தாய்ப்பாலின் ஊட்டச்சத்து தரத்தை வெல்ல முடியாது என்ற கருத்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்ததால் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் வாங்குவதற்காக மாதத்திற்கு சுமார் 50,000 முதல் 1 லட்ச ரூபாய் வரை செலவிடுவதாக கூறப்பட்டது.
ஆரம்பத்தில் அக்கம்பக்கம் வீட்டாருக்கு ஒரு சேவை மனப்பான்மையில் தாய்ப்பாலை வழங்கி வந்த நிலையில் அதன் பின் பணம் கிடைக்க ஆரம்பித்தவுடன் தாய்ப்பால் என்பது ஒரு பிசினஸ் ஆகவே மாறிவிட்டது. பலர் தாய்ப்பால் வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளவும் என ஆன்லைனில் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யும் அளவுக்கு தாய்ப்பால் பிசினஸ் தற்பொழுது அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. இதை பகுதி நேர தொழிலாகவும் முழு நேர தொழிலாகவும் மாற்றும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் தாய்ப்பால் ஒரு மிகப்பெரிய பிசினஸ் ஆக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
