சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிராக ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ஒன்றுபட்ட ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி, உலக அரங்கில் தங்கள் பலத்தை வெளிப்படுத்தின. இந்த நிலையில் வடகொரிய அதிபர் கிம், இந்த கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது உரையில், எந்த ஒரு நாடும், தங்கள் கொள்கைகளை மற்ற உலக நாடுகள் மீது திணிக்க முடியாது என்று மறைமுகமாக அமெரிக்காவை கடுமையாக விமர்சித்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சீன அதிபரின் கருத்தை எதிரொலித்து, உக்ரைன் போரை தொடங்கியது மேற்குலக நாடுகள் தான் என்று குற்றம் சாட்டினார். மேலும், உலகளாவிய ஆட்சி முறையில் ஒரு புதிய அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்தியா இந்த மாநாட்டில் பங்கேற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்த நிலையில், இந்தியா தனக்கு வேறு வலிமையான நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியுள்ளது.
இந்த மாநாடு, அமெரிக்காவிடம் இருந்து விலகி, சீனாவுடனான உறவில் இருந்த விரிசல்களை சரிசெய்து, இந்தியா தனக்கான புதிய கூட்டாளிகளைத் தேடுகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மோடியை ட்விட்டரில் விமர்சித்து, அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு “முற்றிலும் ஒருதலைப்பட்சமான பேரழிவு” என்று குறிப்பிட்டார். ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக அதிகாரியும், மோடி “சர்வாதிகாரிகளான” புதின் மற்றும் ஜி ஜின்பிங்கை சந்தித்ததாக விமர்சித்துள்ளார்.
இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் கடுமையாக அமெரிக்காவை எதிர்க்க தொடங்கிய நிலையில் தற்போது வடகொரியா இந்த கூட்டணியில் இணைந்துள்ளது. வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பல ஆண்டு பகை என்பது தெரிந்ததே.
மோடி, புதின், ஜி ஜின்பிங் ஆகிய மூன்று தலைவர்களுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இணைகிறார் என்ற செய்தி டிரம்புக்கு அடி வயிற்றை கலக்கியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வருகை தரும் சிறப்பு ரயில் சீன எல்லையை கடந்து பெய்ஜிங்கிற்கு பயணிக்கிறது. அவர் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் சரணடைதலின் 80-ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் ராணுவ அணிவகுப்பு மற்றும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மொத்தத்தில் இந்த மாநாடு, உலகளாவிய அதிகார மையங்கள் மாறி கொண்டிருப்பதை வெளிப்படையாக காட்டுகிறது. அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளால் அதிருப்தியடைந்துள்ள நாடுகள், புதிய கூட்டணிகளை உருவாக்கி, தங்களுக்குள்ளேயே பொருளாதார மற்றும் அரசியல் ஒத்துழைப்பை வலுப்படுத்த முயல்கின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
