எவ்வளவோ பார்த்துட்டோம், இதை பார்க்க மாட்டோமா? அமெரிக்காவையே சமாளிச்சாச்சு.. மெக்சிகோவை சமாளிக்க முடியாதா? என்ன ஆச்சு மெக்சிகோவுக்கு? இந்தியாவின் நட்பு நாடாகத்தானே இருந்தது.. திடீரென இந்திய பொருட்களுக்கு மெக்சிகோ விதித்த 50 சதவீத வரி.. அமெரிக்காவை சமாதானப்படுத்தவா? இந்தியாவின் கார் ஏற்றுமதிக்கு பெரும் பாதிப்பா?

அமெரிக்கா பெரும்பாலான இந்திய பொருட்களின் மீது 50 சதவீதம் வரி விதித்த நான்கு மாதங்களுக்கு பிறகு, தற்போது மெக்சிகோ அரசும் இந்தியா மற்றும் சீனா உட்பட ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட…

india

அமெரிக்கா பெரும்பாலான இந்திய பொருட்களின் மீது 50 சதவீதம் வரி விதித்த நான்கு மாதங்களுக்கு பிறகு, தற்போது மெக்சிகோ அரசும் இந்தியா மற்றும் சீனா உட்பட ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களின் மீது 50 சதவீதம் வரை வரி விதிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

உள்நாட்டுத் தொழில்துறை மற்றும் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ள இந்த வரிகள், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெக்சிகோ அரசு இந்த வரியை விதித்துள்ள பொருட்களின் பட்டியலில் வாகன உதிரி பாகங்கள், சிறிய ரக கார்கள், ஆடைகள், பிளாஸ்டிக் பொருட்கள், எஃகு, வீட்டு உபயோக பொருட்கள், பொம்மைகள், ஜவுளி, தளபாடங்கள், காலணிகள், தோல் பொருட்கள், காகிதம், அட்டை பெட்டிகள், மோட்டார் சைக்கிள்கள், அலுமினியம், டிரெய்லர்கள், கண்ணாடி, சோப்புகள், வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் என பலவும் அடங்கும். மெக்சிகோவுடன் வர்த்தக ஒப்பந்தம் இல்லாத இந்தியா, தென் கொரியா, சீனா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் இந்த புதிய வரியால் கடுமையாக பாதிக்கப்பட உள்ளன.

மெக்சிகோ இவ்வாறு இறக்குமதி வரிகளை விதிப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. மெக்சிகன் அரசாங்கம் ஆசிய நாடுகளுடனான இறக்குமதி சார்ந்திருப்பை குறைக்கவும், குறிப்பாக சீனாவுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வை கட்டுப்படுத்தவும் முயல்கிறது. சீனாவிலிருந்து மட்டும் 2024 ஆம் ஆண்டில் மெக்சிகோ சுமார் $130 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இந்த வரிகள் மூலம் கூடுதலாக சுமார் $3.8 பில்லியன் வருவாய் ஈட்டவும் மெக்சிகோ அரசு திட்டமிட்டுள்ளது. அத்துடன், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், உள்ளூர் தொழில்துறையை பாதுகாக்கவும் மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் விரும்புகிறார்.

ஆனாலும், இந்தப் புதிய வரிகள் பிற நோக்கங்களை கொண்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் அடுத்த ஆண்டு மறுஆய்வு செய்யப்பட உள்ள நிலையில், அமெரிக்காவை சமாதானப்படுத்துவதற்காகவே இந்த வரிகள் விதிக்கப்படுவதாக மெக்சிகன் பொருளாதார செய்தி நிறுவனமான ‘எல் ஃபினான்சியர்’ தெரிவித்துள்ளது. சீனா தனது எதிர்வினையை பதிவு செய்து, “எல்லா வடிவங்களிலும் ஒருதலைப்பட்சமான வரி உயர்வை நாங்கள் எப்போதும் எதிர்க்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளதுடன், “ஒருதலைப்பட்சம் மற்றும் பாதுகாப்புவாதத்தின் தவறான நடைமுறைகளை மெக்சிகோ விரைவில் சரிசெய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.

இந்த மெக்சிகோ வரி உயர்வு இந்திய பொருளாதாரத்தில் குறிப்பாக வாகன துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, வோக்ஸ்வாகன், ஹூண்டாய், நிசான் மற்றும் மாருதி சுசுகி போன்ற முக்கிய இந்திய கார் ஏற்றுமதியாளர்களிடமிருந்து சுமார் $1 பில்லியன் மதிப்புள்ள ஏற்றுமதிகள் பாதிக்கப்படும். கார்களுக்கான இறக்குமதி வரி 20 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயரும், இது இந்தியாவின் மிகப்பெரிய வாகன ஏற்றுமதியாளர்களுக்கு கடுமையான அடியாக அமையும். தென் ஆப்பிரிக்கா மற்றும் சவுதி அரேபியாவுக்கு பிறகு மெக்சிகோ இந்தியாவின் மூன்றாவது பெரிய கார் ஏற்றுமதி சந்தையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-மெக்சிகோ வர்த்தக உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை பெற்றிருந்த நிலையில், இந்த திடீர் வரி உயர்வு இருதரப்பு வர்த்தகத்தைப் பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். “இந்த வரி உயர்வு இந்திய தொழில்துறைக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்… இந்திய அரசாங்கம் மெக்சிகோ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை தக்க வைக்க ஆதரவு அளிக்க வேண்டும்,” என்று இந்திய தொழில்துறை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

வர்த்தக ஒப்பந்தம் இல்லாத நிலையில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த சவால், மாற்று சந்தைகளைத் தேட வேண்டிய அல்லது தற்போதுள்ள ஏற்றுமதி உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.