இந்த உலகில் பல இடங்களில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள் நடந்து வருவதுடன் மட்டுமில்லாமல் அதன் முடிவுகள் சொல்லும் தகவல்கள் நிச்சயம் ஒரு நிமிடம் நம்மை தலை சுற்றத் தான் வைக்கும். இன்றாவது சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றின் வளர்ச்சி காரணமாக, அடுத்த சில நூறாண்டுகளுக்கு இந்த காலம் எப்படி அறிந்து கொள்வதற்கான வழிகள் அதிகமாக இருக்கும் என தெரிகிறது.
ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்த பூமி எப்படி இருந்தது என்பதற்கும், அப்போது வாழ்ந்த மக்கள் எந்த மாதிரியான பழக்க வழக்கங்கள் மேற்கொண்டார்கள் என்பது பற்றியும் அறிய அகழ்வாராய்ச்சிகள் தான் பெரும்பாலும் உதவி செய்து வருகிறது. மனிதர்கள் அந்த காலத்தில் வாழ்ந்து மண்ணிற்கு அடியில் புதைந்த இடங்களை தோண்டி அதில் கிடைக்கும் பொருட்கள் மூலம் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய வரலாற்றையும் சொல்கிறார்கள்.
7000 வருட விசித்திர சிலை
மேலும், இதில் கிடைக்கும் தகவல்களை நாம் அறியும் போது நிச்சயம் ஒருவித ஆச்சரியம் நமக்குள் உருவாகும். அந்த வகையில் தற்போது குவைத் பகுதியில் நிகழ்ந்த ஆராய்ச்சியில் சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில் அதன் பின்னணி பலரையும் அசந்து பார்க்க வைத்துள்ளது.
குவைத்தில் அமைந்துள்ள Bahra 1 அகழாய்வு தளத்தில் சமீபத்தில் நடந்த ஆய்வில் ஒரு களிமண் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு வேற்றுகிரக ஜீவியான ஏலியனை போலவும் இந்த சிலை உள்ளது. நேர்த்தியான தலை, ஒட்டிய கண்கள், தட்டையான மூக்கு மற்றும் நீளமான மண்டை ஓடு என இந்த சிலையும் விசித்திரமாக உள்ளது.
வியக்க வைக்கும் பின்னணி
7,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இப்படி முகம் உள்ளிட்ட விஷயங்கள் மாறியிருக்கும் படி ஒரு சிலை வடிவமைக்கப்பட்டதன் காரணம் ஆராய்ச்சியாளர்களையே ஒரு நிமிடம் மிரண்டு போக வைத்துள்ளது. அது மட்டுமில்லாமல், ஏலியனுடன் அப்போதே தொடர்பு இருக்குமா என்று கூட பலர் நினைத்திருப்பார்கள்.
ஆனால், இது பற்றி மேலும் சில ஆய்வாளர்கள் தெரிவிக்கும் தகவலின் படி, குறிப்பிட்ட சமுதாயத்தினர் அந்த காலத்தில் இப்படி தங்களை வித்தியாசமாக காண்பிப்பதற்கு விசித்திரமான வகையில் இந்த சிலையை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. Ubaid கலாச்சாரத்துடன் இந்த சிலை தொடர்பு பெற்றிருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
அந்த காலத்தில் கலை பழக்கத்திற்காக இப்படி நீண்ட தலையுடன் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வந்ததாகவும், உயர்ந்த சமுதாயத்தினர் என்பதை உணர்த்தும் வகையில் இருப்பதாகவும் அறியப்படுகிறது. மேலும் இது வழிபாடு பொருளாகவோ அல்லது ஒரு சமூகத்தின் சின்னமாக கூட இருக்கலாம் என அறியப்படும் நிலையில், 7000 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு வினோத உருவத்தில் அந்த காலத்து மக்கள் உருவாக்கியதை பலரும் அதிசயத்துடன் தான் பார்த்து வருகின்றனர்.