சிங்கத்தோட தலையை வீழ்த்திட்டோம்னு சந்தோஷப்படாதீங்க… இனிமேதான் சிதறி நிக்கிற ஒவ்வொரு ஈரானியனும் சிறுத்தையா மாறி சீறப்போறான்! அமைதி பேச்சுவார்த்தைக்கு இனி இடமில்லை… ஏவுகணைகள் பேசப்போறதுதான் இனிமே எங்க பாஷை! எங்க உச்ச தலைவரை தொட்டது உங்க சரித்திரத்தோட மிகப்பெரிய தப்பு… அந்த தப்புக்கு நீங்க கொடுக்கப்போற விலை உங்க தேசத்தோட நிம்மதியா இருக்கும்! ஈரானின் ஆவேச நடவடிக்கைகள்..!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்த நாடு பெரும் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து இன்று…

iran vs america

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்த நாடு பெரும் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து இன்று அதிகாலை ஈரானின் பல்வேறு பகுதிகளில் நடத்திய அதிரடி வான்வழி தாக்குதல்களில் கமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தை ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் “முஸ்லிம்களுக்கு எதிரான போர் பிரகடனம்” என்று கடுமையாக சாடியுள்ளார். கமேனியின் மறைவை தொடர்ந்து, மூத்த மதகுருவான அயதுல்லா அலிரேசா அராஃபி ஈரானின் தற்காலிக உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரானின் அதிகார மையத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் மாற்றம், அந்த நாட்டின் எதிர்கால பாதையை தீர்மானிக்கும் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.

கமேனியின் மறைவுக்கு பழிவாங்கும் நோக்கில் ஈரான் தற்போது மிகப்பெரிய பதிலடி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி, “முன்னர் நடத்திய தாக்குதல்களை விட பல மடங்கு வலிமையான தாக்குதலை இஸ்ரேலும் அமெரிக்காவும் அனுபவிக்க போகிறார்கள்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே பஹ்ரைன் வான்வெளியில் ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டுள்ள நிலையில், சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் ராணுவ தளங்களையும் இலக்கு வைத்து ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டுள்ளன. ஈரான் முழுவதும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு நடக்கும் உண்மையான நிலவரங்கள் வெளிவருவதில் சிக்கல் நீடிக்கிறது. தெஹ்ரானின் முக்கிய பகுதிகளில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து வருவதாக ஈரான் அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் இந்த தாக்குதலுக்கு பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கமேனியின் கொலையை “சர்வதேச சட்டங்களை மீறிய அநாகரிகமான செயல்” என்று வருணித்துள்ளார். சீனாவும் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளதோடு, தேவையற்ற ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐநா சபை மூலம் வலியுறுத்தியுள்ளது. ஈராக் நாடு கமேனியின் மறைவுக்காக மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே போராட்டங்கள் வெடித்துள்ளன; இதில் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக தலைவர்களின் இந்த எதிர்வினைகள், இப்போரானது இரு நாடுகளுக்கு இடையிலானது மட்டுமல்லாமல், உலகளாவிய பிளவை ஏற்படுத்தும் அபாயம் கொண்டிருப்பதை உணர்த்துகிறது.

இந்த போர்ச்சூழலால் சர்வதேச போக்குவரத்து மற்றும் கல்வி துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளின் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், டெல்லி விமான நிலையத்தில் மட்டும் சுமார் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலை கருத்தில் கொண்டு, மார்ச் 2, 2026 அன்று நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். போர் பதற்றம் குறையும் வரை தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது என்றும், மார்ச் 3-ஆம் தேதி நிலைமை மீண்டும் ஆய்வு செய்யப்படும் என்றும் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

கப்பல் போக்குவரத்திலும் ஈரான் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியுள்ளது. ஓமன் நாட்டின் துக்ம் துறைமுகத்தில் இருந்த எண்ணெய் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கத்தார் கண்டனம் தெரிவித்துள்ளது. ஓமனின் இறையாண்மையை மீறும் இச்செயல் கண்டிக்கத்தக்கது என்று கத்தார் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இத்தாக்கதலில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஓமன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் விநியோக வழித்தடங்கள் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளதால், உலக நாடுகளுக்கு செல்லும் கச்சா எண்ணெய் விநியோகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மூசாவி மற்றும் ராணுவத் தளபதி நசீர்சாதே ஆகியோரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாட்டின் மிக முக்கியமான ராணுவ தலைவர்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டிருப்பது ஈரானிய ராணுவத்திற்கு பேரிழப்பாகும். இருப்பினும், ஈரானின் வரலாற்று சிறப்புமிக்க நகரமான இஸ்பஹானில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கமேனிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகள் மீண்டும் ஒரு நீண்ட கால போருக்குள் தள்ளப்படுமா என்ற அச்சம் உலகெங்கும் எழுந்துள்ளது. அமைதி பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புகள் தற்போது மிகக் குறைவாகவே தெரிகின்றன.