மத்திய கிழக்கில் போர் மேகங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இயங்கி வந்த சிஐஏ உளவுப்பிரிவு தளம் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை காமேனியின் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறிந்து தாக்குதல் நடத்த சிஐஏ உதவியதால், அதற்கு பதிலடியாக ஈரானின் ‘ஷாஹித்’ ட்ரோன்கள் இந்த உளவு தளத்தை தகர்த்துள்ளன. இந்த தாக்குதலில் தூதரக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும், புகை மண்டலத்தால் வளாகம் பாதிக்கப்பட்டதாகவும் உள்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானுக்குள் ஒரு பகுதி மக்கள் எழுச்சியை தூண்டும் நோக்கில், அந்நாட்டின் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு சிஐஏ ஆயுதங்களை வழங்கி வருவதாக கூறப்படும் பின்னணியில் இந்த தாக்குதல் முக்கியத்துவம் பெறுகிறது. காமேனியின் மரணத்திற்கு பிறகு ஈரானிய ஆட்சியை நிலைகுலைய செய்ய அமெரிக்க உளவு நிறுவனம் திரைமறைவில் வேலை செய்து வருவதை உணர்ந்த ஈரான், நேரடியாக அமெரிக்காவின் உளவு மையத்தையே இலக்கு வைத்துள்ளது. ரியாத்தில் உள்ள தூதரக வளாகத்தில் இரண்டு ட்ரோன்கள் தாக்கியதை அமெரிக்க மற்றும் சவூதி அரசாங்கங்கள் உறுதிப்படுத்தினாலும், சிஐஏ தளம் பாதிக்கப்பட்ட விவரத்தை ரகசியமாகவே வைத்துள்ளன. இருப்பினும், அங்கு பணியாற்றிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.
மறுபுறம், துபாயில் உள்ள அமெரிக்க தூதரகமும் நேற்று ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளை மீறி ஊடுருவிய ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள், தூதரகத்திற்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் வெடித்து சிதறின. முன்னெச்சரிக்கையாக அந்த வளாகம் காலி செய்யப்பட்டிருந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இது தவிர, கத்தாரில் உள்ள மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க ராணுவத் தளமான அல்-உடைத் மீதும் ஈரான் இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள தங்களின் நட்பு நாடுகள் மீது ஈரான் இவ்வளவு ஆக்ரோஷமாகப் பாயும் என்று வெள்ளை மாளிகை எதிர்பார்க்கவில்லை என டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஈரானின் அரசியல் அதிகார மையத்திலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கொல்லப்பட்ட அலி காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி, ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் பலத்த அழுத்தத்திற்கு மத்தியில் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது. மொஜ்தபா ஒரு உயர்மட்ட மத குருவோ அல்லது அதிகாரப்பூர்வ பதவிகளில் இருந்தவரோ இல்லை என்றாலும், ராணுவத்துடனான அவரது நெருக்கம் மற்றும் அவரது தந்தையின் செல்வாக்கு அவரை இந்த பதவிக்கு கொண்டு வந்துள்ளது. மன்னராட்சி முறைக்கு எதிராக உருவான ஈரானிய புரட்சியின் கொள்கைகளுக்கு இது முரணாக இருந்தாலும், தற்போதைய இக்கட்டான போர் சூழலில் ராணுவம் இவரை முன்னிறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இதுவரை ஈரானுக்குள் 1,700-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளன. ஏவுகணை தளங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் இதில் அடங்கும். ஆனால், களத்தில் உள்ள தகவல்களின்படி மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புகளும் இந்த தாக்குதலில் சிதைந்துள்ளன. ஈரானிய ரெட் கிரசண்ட் அமைப்பு இதுவரை 787 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பதிலுக்கு ஹெஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலின் கடற்படை தளங்களை குறிவைத்துத் தாக்கி வருவதால், லெபனான் எல்லைக்குள் இஸ்ரேலிய படைகள் தரைவழி ஊடுருவலை தீவிரப்படுத்தியுள்ளன.
சர்வதேச அளவில் இந்த மோதல் பெரும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. உலக எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தை கொண்டுள்ள ஹார்முஸ் நீரிணையை மூடிவிடுவதாக ஈரான் மிரட்டியுள்ளதால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதுடன் பங்குச்சந்தைகளும் சரிந்துள்ளன. பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் அமெரிக்காவிற்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியது இருதரப்பு உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த இனி காலம் கடந்துவிட்டதாக கூறியுள்ள அமெரிக்கா, அடுத்த கட்டமாக ஈரானை இன்னும் கடுமையாக தண்டிக்க போவதாக எச்சரித்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
