மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் இன்று ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில், வன்முறை ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் தங்கள் குடிமக்களை இந்த போர்க்களத்திலிருந்து வெளியேற்ற தீவிரமாக முயன்று வரும் வேளையில், ஐக்கிய அரபு அமீரகம் தனது நாட்டின் மீது ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஆறு ட்ரோன் தாக்குதல்களை உறுதிப்படுத்தியுள்ளது. துபாயை இலக்காக கொண்டு ஈரானிய ட்ரோன்கள் சீறிப் பாய்ந்ததால், அங்கு விடுமுறையை கழிக்க வந்த சுற்றுலா பயணிகள் அச்சத்தில் உறைந்து தப்பியோடி வருகின்றனர். அபுதாபியின் யாஸ் மெரினா பகுதியில் ஈரானிய ட்ரோன் தாக்குதலுக்கு பிறகு கரும்புகை சூழ்ந்துள்ள காட்சிகள் போரின் தீவிரத்தை உணர்த்துகின்றன.
மறுபுறம், வளைகுடா நாடுகள் ஈரானின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள பயன்படுத்தும் பேட்ரியாட் ஏவுகணைகளின் இருப்பு அபாயகரமான அளவில் குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க, உக்ரைனிடம் இருந்து ட்ரோன் இடைமறிப்பு ஏவுகணைகளை விலைக்கு வாங்க அமெரிக்கா ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஈரானால் இன்று ஒரே நாளில் ஏவப்பட்ட 131 ட்ரோன் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு அரண் தடுமாறி வருகிறது. இதற்கிடையில், அஜர்பைஜானில் உள்ள ஒரு விமான நிலையம் மற்றும் பள்ளிக்கூடம் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், ஈரான் அந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்க மறுத்துள்ளது.
ஈரான் தற்போது எதிரி நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. பஹ்ரைனில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றில் ஈரானிய தாக்குதலுக்கு பிறகு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தியை பாதிக்க வைப்பதன் மூலம் உலக பொருளாதாரத்தை முடக்க ஈரான் திட்டமிட்டு வருவது தெளிவாக தெரிகிறது. சவுதி அரேபியா மற்றும் அமீரகத்தின் முக்கிய எண்ணெய் நிலையங்கள் மீதும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆறாவது நாள் போர், மத்திய கிழக்கின் அரசியல் மற்றும் ராணுவ வரைபடத்தை முழுமையாக மாற்றி வருகிறது. ஒருபுறம் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தினாலும், மறுபுறம் ஈரானின் ட்ரோன் படை இடைவிடாத நெருக்கடியை அளித்து வருகிறது. அமெரிக்கா தனது நட்பு நாடுகளை காக்கப் போராடி வரும் நிலையில், ரஷ்யா மற்றும் சீனாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது உலக நாடுகளின் கவலையாக உள்ளது. ஒருவேளை ரஷ்யாவும், சீனாவும் ஈரானுக்கு ஆதரவு கொடுத்தால், இந்த மோதல் ஒரு முழு அளவிலான உலக போராக உருவெடுக்கும் அபாயமும் உள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
