மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த பல ஆண்டுகளாக நிலவி வந்த அரசியல் சமன்பாடுகள், ஒரே இரவில் தலைகீழாக மாறியுள்ளன. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை தனது அலுவலகத்தில் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, கமேனி இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்பதை ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. 86 வயதான கமேனியின் மறைவை தொடர்ந்து, ஈரானில் 40 நாட்கள் துக்க காலமும், 7 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஈரான் வரலாற்றில் ஒரு சகாப்தத்தின் முடிவாகவும், அந்த நாட்டின் எதிர்காலம் குறித்த மிகப்பெரிய கேள்விகுறியாகவும் உருவெடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், கமேனியை “வரலாற்றின் மிக மோசமான மனிதர்களில் ஒருவர்” என்று விமர்சித்துள்ளார். இஸ்ரேலிய உளவுத்துறையுடன் இணைந்து மிக நுணுக்கமான கண்காணிப்பு அமைப்புகளின் உதவியோடு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் கமேனியால் தப்பிக்கவே முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கமேனியின் மறைவு ஈரான் மக்களுக்கு கிடைத்துள்ள ஒரு மிகப்பெரிய சுதந்திர வாய்ப்பு என்று வர்ணித்துள்ள டிரம்ப், அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு அமெரிக்காவிடம் சரணடைந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், இல்லையெனில் மரணம் நிச்சயம் என்றும் எச்சரித்துள்ளார். இந்த தாக்குதலில் கமேனியின் மூத்த ஆலோசகர் அலி ஷாம்கானி மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளனர்.
கமேனியின் மறைவை தொடர்ந்து ஈரானில் ஏற்பட்டுள்ள அதிகார வெற்றிடத்தை பயன்படுத்தி கொள்ள அந்நாட்டு எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. 1979 புரட்சிக்கு முன் ஆட்சியில் இருந்த ஷா மன்னரின் மகன் ரசா பஹ்லவி, தற்போது ஈரானில் நியமிக்கப்படும் எந்தவொரு வாரிசும் செல்லுபடியாகாது என்றும், மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். ஈரானிய அரசியலமைப்பின்படி, உச்ச தலைவர் மறைந்தால் அதிபர், நீதித்துறை தலைவர் மற்றும் கார்டியன் கவுன்சில் உறுப்பினர்கள் அடங்கிய குழு தற்காலிகமாக நாட்டை வழிநடத்த வேண்டும். ஆனால், தற்போதைய சூழலில் அதிபர் மசூத் பெசெஷ்கியன் எங்கே இருக்கிறார் என்ற தகவல் தெரியாததால், ஈரானிய ராணுவம் மற்றும் புரட்சிகர காவல்படையின் கைகள் ஓங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் இந்த வீழ்ச்சிக்கு பதிலடியாக, அந்த நாட்டு ராணுவம் வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை தொடுத்துள்ளது. குறிப்பாக, சர்வதேச வர்த்தக மையமான துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நகரங்கள் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் உலகப்புகழ்பெற்ற ‘புர்ஜ் அல் அரப்’ ஹோட்டல் ஆகியவை இந்த தாக்குதலில் சேதமடைந்துள்ளன. அபுதாபி ஜயத் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் ஒரு வெளிநாட்டவர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரானின் இந்த ஆவேசமான பதில் தாக்குதலால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு வான்வெளியும் மூடப்பட்டு, ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திடீர் போர்ச்சூழல் காரணமாக துபாய் மற்றும் அபுதாபியில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவின் புகழ்பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் இந்திய கூடைப்பந்து அணியினர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் விமான நிலையங்களில் சிக்கி தவிக்கின்றனர். துபாய் வான்வெளி காலவரையின்றி மூடப்பட்டுள்ளதால், இந்திய தூதரகம் அங்குள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் கடைகளில் முண்டியடிப்பதையும், விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதையும் அங்கிருந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. போர் இன்னும் சில தினங்களுக்கு நீடித்தால், இது உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் வர்த்தகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மத்திய கிழக்கின் இந்த அதிகார மாற்றம் உலக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை குறிக்கிறது. 36 ஆண்டுகளாக ஈரானை இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்த கமேனியின் வீழ்ச்சி, அந்த பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது. அதேசமயம், ஈரானின் புரட்சிகர காவல்படை எத்தகைய தீவிரமான பதிலடியை கொடுக்கும் என்பதை பொறுத்தே அடுத்தகட்ட அமைதி அமையும். ஒருபுறம் ஆட்சி மாற்றத்திற்கான கொண்டாட்டங்களும், மறுபுறம் போரின் கோரத்தாண்டவமும் நிலவி வரும் வேளையில், ஈரானிய மக்கள் தங்களின் நாட்டை மீண்டும் எப்படிக் கட்டமைக்க போகிறார்கள் என்பதை உலகம் உற்று நோக்கி கொண்டிருக்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
