மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதன் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், குவைத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த பல அமெரிக்க போர் விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியுள்ளன. குவைத்தின் அலி அல் சேலம் அமெரிக்க ராணுவ தளத்திற்கு சற்று தொலைவிலேயே இந்த விமானங்கள் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில், அமெரிக்க போர் விமானம் ஒன்று தீப்பிடித்த நிலையில் வானத்திலிருந்து சுழன்று கீழே விழுவதையும், அதன் விமானி பாராசூட் மூலம் குதித்து தப்பிப்பதையும் காண முடிகிறது. இந்த விபத்துக்களை உறுதிப்படுத்தியுள்ள குவைத் பாதுகாப்பு அமைச்சகம், அதிர்ஷ்டவசமாக விமான பணியாளர்கள் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர் என்றும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த விமான விபத்துக்களுக்கு பின்னால் ஈரானின் நேரடி தாக்குதல்கள் இருக்கலாம் என்ற பலமான சந்தேகம் எழுந்துள்ளது. ஈரானின் மூன்றாம் நாள் தாக்குதல் தொடரும் நிலையில், குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்திற்குள் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அங்கிருந்து கரும்புகை வெளியேறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் தூதரகத்தின் உள்ளே எச்சரிக்கை மணிகள் ஒலிக்க தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குவைத்தில் இதுவரை மூன்று அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நிலைமை மோசமடைந்து வருவதால், அமெரிக்க குடிமக்கள் யாரும் தூதரகத்திற்கு வர வேண்டாம் என்றும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குவைத் மட்டுமின்றி, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகமும் ஒரு அதிரடி எச்சரிக்கையை விடுத்துள்ளது. பயங்கரவாத குழுக்கள் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க குடிமக்களை இலக்கு வைத்து தாக்கத் திட்டமிட்டுள்ளதால், அமெரிக்கர்கள் யாரும் ஹோட்டல்களில் தங்க வேண்டாம் என்றும், பொது இடங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வளைகுடா நாடுகளில் நிலவும் இந்த அசாதாரண சூழல், சர்வதேச வான்வழி போக்குவரத்தையும், எண்ணெய் விநியோகத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக, துபாய் மற்றும் அபுதாபி போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் சுற்றுலா பயணிகள் சிக்கி தவித்து வருகின்றனர். போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், துபாய் மற்றும் தோஹா நகரங்களில் அடிக்கடி வெடிப்பு சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளன.
மத்திய கிழக்கில் சிக்கியுள்ள தங்களது குடிமக்களை வெளியேற்ற ஐரோப்பிய நாடுகள் தற்போது பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றன. ஏற்கனவே சுமார் 1,00,000 பிரிட்டிஷ் குடிமக்கள் இந்த போர் முனையிலிருந்து தங்களை வெளியேற்ற கோரி விண்ணப்பித்துள்ளனர். ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் ராயல் ஏர்போர்ஸ் தளத்தையும் தாக்கியுள்ளதால், மீட்பு நடவடிக்கைகளிலும் சிக்கல்கள் நீடிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த போரைக் கைவிடுங்கள் என்ற இறுதி எச்சரிக்கையை ஈரான் அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ள நிலையில், போர் இன்னும் பல நாடுகளுக்கு விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய போர் சூழல் உலக பொருளாதாரத்தை நிலைகுலைய செய்துள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் டேங்கர்கள் ஈரானால் இலக்கு வைக்கப்படுவதால், கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இது இந்திய பங்குச்சந்தை உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ‘எபிக் பியூரி’ ராணுவ நடவடிக்கைக்கும், ஈரானின் Never Surrender கொள்கைக்கும் இடையிலான இந்த போராட்டத்தில், வளைகுடா நாடுகள் போர்க்களமாக மாறியுள்ளன. ராணுவ தளங்களை அனுமதித்துள்ள நட்பு நாடுகளையும் ஈரான் எச்சரித்துள்ளதால், அந்த பிராந்தியத்தில் உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
விமான விபத்துக்களின் காரணம் குறித்து குவைத் அரசு தீவிர விசாரணை நடத்தி வந்தாலும், இது ஈரானின் மின்னணுப் போர் அல்லது ஏவுகணை தாக்குதலின் விளைவாகவே இருக்கலாம் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானிய தலைமைக்கு இடையிலான இந்த ஈகோ யுத்தம், ஒரு முழு அளவிலான உலகப்போராக மாறிவிடுமோ என்ற அச்சம் சர்வதேச சமூகத்திடையே எழுந்துள்ளது. அமைதி பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகள் முழுமையாக மூடப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
