இந்திய பெருங்கடலின் மையப்பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் கூட்டு ராணுவ தளத்தின் மீது ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்த தாக்குதல் ஒரு முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே இரு தரப்பிற்கும் இடையே மோதல் முற்றி வந்த சூழலில், தற்போது இந்திய பெருங்கடல் வரை இந்த யுத்தம் விரிவடைந்துள்ளது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளை ‘குறைத்து கொள்வது’ குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். போரின் நோக்கங்களை அடைவதற்கு அமெரிக்க ராணுவம் மிக நெருக்கத்தில்’ இருப்பதாகவும், விரைவில் அமைதி திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், டிரம்ப் இத்தகைய சமாதான பேச்சுகளை முன்னெடுத்த சில மணி நேரங்களிலேயே, டியாகோ கார்சியா தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி வெளியானது அவரது கூற்றிற்கு முரணாக அமைந்துள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டியாகோ கார்சியா கூட்டு ராணுவ தளத்தை இலக்காக கொண்டு ஈரான் இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளது. இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க அதிகாரிகள், ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளும் இலக்கை தாக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஒரு ஏவுகணை பறந்து கொண்டிருக்கும் போதே தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்ததாகவும், மற்றொன்று அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பால் நடுவானிலேயே தடுத்து அழிக்கப்பட்டதாகவும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலுக்கு உள்ளான டியாகோ கார்சியா தளம் பிரிட்டிஷ் எல்லைக்கு உட்பட்ட ஒரு தொலைதூர தீவில் அமைந்துள்ளது. இது அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் ஆகியவற்றின் முக்கிய மையமாகத் திகழ்கிறது. ஈரானிலிருந்து சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் இந்த தளம் அமைந்துள்ள நிலையில், இவ்வளவு தொலைவில் உள்ள இலக்கை தாக்க ஈரான் முயற்சி செய்திருப்பது ராணுவ ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நடவடிக்கை இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி முன்னதாக அளித்த பேட்டியில், தங்களது ஏவுகணைகளின் வரம்பை 2,000 கிலோமீட்டருக்குள் மட்டுமே ஈரான் மட்டுப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், தற்போது 4,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டியாகோ கார்சியாவை இலக்கு வைத்ததன் மூலம், ஈரானின் ஏவுகணை தொழில்நுட்பம் அவர்கள் சொன்னதை விட இருமடங்கு அதிகத் திறன் கொண்டது என்பது நிரூபணமாகியுள்ளது. இது சர்வதேச சமூகத்திடம் ஈரான் முன்வைத்த வாக்குறுதிகளை மீறும் செயலாகவும், அதன் ராணுவ வலிமையை பறைசாற்றும் முயற்சியாகவும் கருதப்படுகிறது.
இந்தத் தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் அதிகாரப்பூர்வமான விளக்கங்களை அளிக்க இன்னும் முன்வரவில்லை. இருப்பினும், அமெரிக்கா தனது அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. டொனால்ட் டிரம்ப் போரை முடிவுக்கு கொண்டுவர நினைத்தாலும், ஈரானின் இந்த துணிச்சலான பதிலடி போரின் காலத்தை மேலும் நீட்டிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த மோதலானது மத்திய கிழக்கு நாடுகளை தாண்டி ஆசிய நாடுகளுக்கும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், உலக நாடுகள் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
