சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சமீபத்திய நிகழ்வு, உலக அரங்கில் இந்தியாவின் ராஜதந்திர நிலைப்பாடு மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார செல்வாக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் நடத்திய சந்திப்புகள் மற்றும் இந்தியாவின் ராஜதந்திர நகர்வு அமெரிக்காவின் பொறாமைக்கு காரணமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி பல நாடுகளின் உயரிய விருதுகளை பெற்றிருப்பதை கண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனிப்பட்ட பொறாமையுடன் இருப்பதாக தெரிகிறது. நோபல் பரிசு மோடிக்கு போய்ச்சேருமோ என்ற அச்சம் காரணமாக, அவர் இந்தியாவுக்கு சவால் விடுக்க முயல்கிறார்.
ஒரு காலத்தில் உலக அதிகார மையங்களாக இருந்த அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மன் போன்ற நாடுகள் இன்று பல்வேறு சிக்கல்களில் மாட்டி கிடக்கின்றன. இந்த நாடுகள் எல்லாம் தற்போது சீனிலேயே இல்லை.
ஐக்கிய நாடுகள் சபை ஒரு ‘பல்லில்லாத பாம்பு’ போல அதன் செல்வாக்கை இழந்துவிட்டது என்றும், ஐ.நா.வின் பாதுகாப்பு சபையில் இடம்பெறுவது கூட தேவையில்லை என்ற நிலைமை உருவாகி வருவதாகவும் சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் இந்தியா தன்னை தனிமைப்படுத்தி கொள்ளாமல் இருக்கவும், அமெரிக்கா கைகழுவும் சூழல் ஏற்பட்டால் சமாளிக்கவும், மாற்று அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறது. SCO அமைப்பில் உள்ள இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளின் மக்கள் தொகை மட்டுமே, உலகின் மொத்த மக்கள் தொகையான 800 கோடியில் 350 முதல் 400 கோடி பேரை கொண்டுள்ளது. இது உலக வல்லரசுகளின் கவனத்தை ஈர்க்கிறது.
அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருக்கும் சீனாவையும், பரம வைரியான ரஷ்யாவையும் இந்தியா தனது நண்பர்களாக ஆக்குவது அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.
இந்தியா ரஷ்யாவுடன் நட்பு பாராட்டுவது, ரஷ்யா மூலம் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என ராஜதந்திரம் கையாளப்படுகிறது. இதனால், பாகிஸ்தானுக்கு சாதகமாக இருந்த சீனா, இந்தியாவுடன் நெருங்குவதற்காக பாகிஸ்தானுடனான நெருக்கத்தை குறைக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்படும்.
ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடிக்காக காரில் காத்திருந்தது போன்ற நிகழ்வுகள், இரு தலைவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட நல்லுறவின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் மூலம் டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை வெளியிடுவது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், இந்திய ரூபாய் சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு (ஈரான், இலங்கை, மலேசியா, பிரான்ஸ் உட்பட) ஏற்றுக்கொள்ளப்படுவது இந்திய ரூபாயின் பயன்பாட்டை உயர்த்துகிறது.
ரஷ்யாவிடம் இருந்து தடையை மீறி கச்சா எண்ணெயை வாங்கி, அதை பதப்படுத்தி ஐரோப்பாவுக்கே இந்தியா ஏற்றுமதி செய்வது, மேற்கத்திய நாடுகளுக்கு பெரிய வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரஷ்யா இந்திய ரூபாயில் எண்ணெய் வர்த்தகம் செய்யத் தயாராக உள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் 7.8% க்கும் அதிகமான GDP வளர்ச்சியை இந்த நிதியாண்டின் காலாண்டில் பதிவு செய்துள்ளது. இது உலக நாடுகள் (அமெரிக்கா, சீனா உட்பட) அடையாத வளர்ச்சி.
இந்தியா எந்தவொரு சவாலையும் சாதகமாக மாற்றி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி என்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்க தலைவர்களின் வெறுப்பான பேச்சுகளுக்கு இந்தியா எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றாமல், ‘செயல்முறையாகவும், ஆக்கப்பூர்வமாகவும்’ தனது வேலையில் கவனம் செலுத்துவதே இந்த சிக்கலுக்கான ராஜதந்திர பதில் என்று சர்வதேச வல்லுனர்கள் கூறுகின்றனர்.
எனவே நான் இனிமேலும் இந்தியாவை எதிர்த்து அல்லது அதிக வரி போட்டு பயமுறுத்துவது வேலைக்காகாது என்பதை உணர்ந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது இந்தியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த முன்வந்துள்ளார். அடுத்த ஆண்டு அவர் இந்தியா வரும்போது அவர் விதித்த வரியை அவரே நீக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பகைத்து கொண்டால் சீனா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா இணைந்து அமெரிக்காவுக்கு பெரும் சிம்ம சொப்பனமாக மாறிவிடும் என்பதையும் மிகவும் தாமதமாக ட்ரம்ப் புரிந்து கொண்டு தற்போது இந்தியாவுடன் கைகோர்க்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது, இந்தியாவின் ராஜதந்திர நகர்வால் ட்ரம்ப் போட்ட வரியை அவரே நீக்கும் அளவுக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
