அமெரிக்காவில் ஒரு ஷாப்பிங் மாலில் ஏழு மணி நேரம் திருடியதாக கூறப்பட்ட இந்திய பெண் ஒருவர், காவலர்களால் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். கைதுக்கு பின், தான் தெரியாமல் செய்துவிட்டதாக கெஞ்சியும், காவல்துறையினர் அவரை விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் உள்ள ‘டார்கெட்’ என்ற கடையில், இந்தியாவை சேர்ந்த ஒரு பெண் பொருட்கள் வாங்குவது போல நடித்து, அங்கிருந்த பொருட்களை திருட முயற்சி செய்துள்ளார். கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் அவர் கடைக்குள் சுற்றிக் கொண்டே இருந்ததை அடுத்து, ஒரு முழு ஷாப்பிங் வண்டியுடன் பணம் செலுத்தாமல் வெளியேற முயன்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், அவரை சி.சி.டி.வி. மூலம் கண்காணித்த ஊழியர்கள், பொருட்களை வெளியே எடுத்து செல்லும் போது அவரை தடுத்து நிறுத்தி, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்தபோது, “நான் எடுத்த பொருட்களுக்கு எல்லாம் பணம் செலுத்தி விடுகிறேன், என்னை ஒன்றும் செய்ய வேண்டாம். நான் எந்தவித சிக்கல்களிலும் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. நான் அமெரிக்காவை சேர்ந்தவர் அல்ல, இந்தியப் பெண். எனவே, என்னை விட்டு விடுங்கள்” என்று கூறிய நிலையில், அவர் கூறிய பெயருக்கும், அடையாளத்திற்கும், அவரது ஆவணத்திற்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது. உடனே காவல்துறையினர், “இந்தியாவில் பொருட்களைத் திருட உங்களுக்கு அனுமதி உண்டா? இனிமேல் நீங்கள் பணம் கொடுக்கும் ஆப்ஷனை மறந்து விடுங்கள். நாங்கள் உங்களை கைது செய்கிறோம், உங்களுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்கும்” என்று கூறினர்.
இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. “இந்தியாவின் மானத்தை அமெரிக்காவில் போய் கெடுத்துவிட்டார் இந்த பெண்” என்று பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “ஒரே ஒரு பெண் செய்ததை வைத்து ஒட்டுமொத்த இந்தியர்களையும் தவறாக நினைக்கக் கூடாது” என்றும் பலர் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
