நம்மூரில் விஜய் – உதயநிதி பனிப்போர் போலவே அமெரிக்காவில் இரு இளம் அரசியல் தலைவர்கள் மோதல்.. விவேக் ராமசாமியை கார்னர் செய்யும் இந்திய வம்சாவளி இளம் அரசியல் தலைவர்.. குடியரசு கட்சிக்கு இது பின்னடைவா? என்ன செய்ய போகிறார் டிரம்ப்? 10 போரை நிறுத்திய டிரம்ப், இந்த பனிப்போரையும் முடிவுக்கு கொண்டு வருவாரா?

அமெரிக்க குடியரசு கட்சிக்குள், உயரும் நட்சத்திரங்களாக கருதப்பட்ட இரு இந்திய வம்சாவளி அரசியல் பிரமுகர்களான நளின் ஹேலி மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் பொதுவெளியில் மிகவும் தனிப்பட்ட மற்றும் கடுமையான அரசியல் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.…

vivek nalin

அமெரிக்க குடியரசு கட்சிக்குள், உயரும் நட்சத்திரங்களாக கருதப்பட்ட இரு இந்திய வம்சாவளி அரசியல் பிரமுகர்களான நளின் ஹேலி மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் பொதுவெளியில் மிகவும் தனிப்பட்ட மற்றும் கடுமையான அரசியல் மோதலில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு கட்சி தலைவர் நிக்கி ஹேலியின் 24 வயது மகன் நளின் ஹேலி அரசியலில் களமிறங்கியுள்ள அவரது இலக்கு, சக இந்திய அமெரிக்க கன்சர்வேட்டிவ் தலைவரான விவேக் ராமசாமி என தெரிகிறது.

விவேக் ராமசாமி ஆண்டு முழுவதும் பள்ளி அட்டவணையை ஆதரித்து, இது அமெரிக்க பெற்றோர்களுக்கு குழந்தை பராமரிப்பு செலவைக் குறைக்க உதவும் என்று வாதிடுகிறார். ஆனால் நளின் ஹேலி X தளத்தில் இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றினார். அவர், விவேக்கை “வக்கிர புத்தி கொண்டவர்” என்று விமர்சித்து இவருடைய ஐடியாவை அமெரிக்க குழந்தைகள் மீது திணிக்க அனுமதிக்க முடியாது என்று பதிவிட்டார். இதில் அவர் பயன்படுத்திய ஒரு வார்த்தை, இந்தியா உட்பட ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள நாடுகளை சீரழித்து காட்ட பயன்படுத்தப்படும் ஒரு தாக்குதல் நிறைந்த சொல்லாக பார்க்கப்படுவதால், உடனடியாக கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

நளின் ஹேலி அத்துடன் நிற்காமல், 2022ஆம் ஆண்டு விவேக் ராமசாமி இட்ட ஒரு பழைய ஸ்கிரீன்ஷாட்டை இணைத்தார். ‘Don’t Say Gay Bill’ என பிரபலமாக அறியப்பட்ட புளோரிடாவின் சர்ச்சைக்குரிய சட்டத்தை பற்றி விவேக் ராமசாமி அப்போதே கருத்து தெரிவித்திருந்தார். சட்டங்களுக்கு பெயரிடும்போது குடியரசு கட்சியினர் அதிக ரைமிங்கை பயன்படுத்த வேண்டும் என்றும், உதாரணமாக, ‘Don’t Say Gay’க்கு பதிலாக, ‘Wait Until 8’ என்று பெயரிட்டிருக்க வேண்டும் என்றும், பள்ளிகள் 8 வயது வரை பாலியல் கல்வியை கற்பிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே விவேக்கின் நிலைப்பாடாக இருந்தது.

விவேக்கின் இந்த நிலையை சுட்டிக்காட்டிய நளின் ஹேலி, இது விவேக்கின் வக்கிர புத்தியை காட்டுகிறது என்று குற்றம் சாட்டினார். மேலும், 8 வயது குழந்தைக்கு பாலியல் கல்வியை கற்றுகொடுக்க விவேக் விரும்புவதாகவும், அத்துடன் குழந்தைகளுக்கு கோடைகால விடுமுறைகளை நீக்குவதை அவர் ஆதரிப்பதாகவும் நளின் குற்றம் சுமத்தினார். உண்மையில், இந்தச் சட்டம் ‘Parental Rights and Education Act’ என்றழைக்கப்படுகிறது. இது மழலையர் பள்ளி முதல் மூன்றாம் வகுப்பு வரை பாலின அடையாளம் மற்றும் பாலியல் நோக்குநிலை பற்றிய வகுப்பறைக் கற்பித்தலை தடை செய்கிறது. இருப்பினும், இந்த சச்சரவுகள் நளின் ஹேலிக்கு புதிதல்ல; அவர் குடியேற்றம், உள்வாங்கல் போன்ற விஷயங்களில் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு, தனது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகவே செயல்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த நவம்பரில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், அதிக திறமை வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களால் பயன்படுத்தப்படும் H-1B விசாக்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நளின் ஹேலி வலியுறுத்தினார். இது மறைமுகமாக விவேக் ராமசாமிக்கு வைத்த செக் என கருதப்பட்டது. அவர் அளித்த மற்றொரு நேர்காணலில், நாட்டோடு முழுமையாக ஒன்றி வாழும் நிலையை அடையாத இயல்புநிலை குடியுரிமை பெற்றவர்கள் பொதுப்பதவிகளை வகிக்க அனுமதிக்கக் கூடாது என்றும், வெளிநாட்டு மாணவர்கள் மீதான கட்டுப்பாடுகளை இறுக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டார். இதுவும் விவேக் ராமசாமி மீது வீசப்பட்ட கணையாக பார்க்கப்பட்டது.

நளின் ஹேலி மற்றும் விவேக் ராமசாமி ஆகிய இருவருமே MAGA (Make America Great Again) இயக்கத்திற்கு நெருக்கமானவர்கள். இருவரும் வலுவான கன்சர்வேட்டிவ் அடையாளங்களையும், தேசபக்தி அடிப்படையிலான கலாச்சார கருத்துக்களையும் கொண்டுள்ளனர். இருப்பினும், இந்த சமீபத்திய மோதல், குடியரசு கட்சி வட்டாரத்தில் உள்ள இரு இளம் இந்திய வம்சாவளி கன்சர்வேட்டிவ் பிரமுகர்களுக்கு இடையிலான மிகவும் கடுமையான மற்றும் தனிப்பட்ட மோதல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது, இரு தலைவர்களுக்கு இடையேயான ஒரு சாதாரண சண்டையா அல்லது MAGA பிரிவுக்குள் ஒரு ஆழமான கருத்தியல் பிளவின் தொடக்கமா என்ற கேள்வியை அமெரிக்க அரசியலில் எழுப்பியுள்ளது.