இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் இருந்த உறவு பிணக்கு மெல்ல மெல்ல குறைந்து, இரு நாடுகளும் மீண்டும் இணையும் பாதையை கண்டறிந்துள்ளன. கனடாவின் புதிய தலைவர் மார்க் கார்னி H-1B விசா திறமையாளர்களை கவர்வதில் ஆர்வம் காட்டுவதுடன், இரு நாட்டு தலைவர்களும் ஒருவருக்கொருவர் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். வர்த்தகத்துறை பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த உறவு மேம்பாடு வேகமாகவும் திட்டமிட்ட வகையிலும் நடந்து வருகிறது.
ஜி7 கூட்டத்தின்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் தனது கனடா சகா அனிதா ஆனந்த் அவர்களை சந்தித்ததை தொடர்ந்து, வர்த்தக உறவுகள் வலுப்பெறுவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
அதேபோல் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் கனடாவின் சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் மேன் சித்து ஆகியோர் புதுடெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏழாவது இந்தியா-கனடா வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான அமைச்சரவை கூட்டிற்கு தலைமை தாங்கினர்.
இரு தரப்பிலும் நிலவிய இராஜதந்திர முடக்கம் காரணமாக தடைபட்ட வர்த்தக வேகத்தை திரும்ப கொண்டு வருவதே இந்த கூட்டின் நோக்கமாக இருந்தது. காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரின் கொலையில் இந்திய அதிகாரிகளுக்கு பங்கு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியதையடுத்து ஏற்பட்ட இரண்டு ஆண்டு மனஸ்தாபம் தற்போது முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.
2023ஆம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர். சித்து, ஒத்துழைப்பை மேம்படுத்தவும், முதலீடுகளை அதிகரிக்கவும், பாதுகாப்பான விநியோக சங்கிலிகளை உருவாக்கவும் அழைப்பு விடுத்தார்.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தலைமையில் காலிஸ்தானிய தீவிரவாதத்திற்கு எதிரான மென்மையான போக்கால் இந்தியா அதிருப்தி அடைந்திருந்த நிலையில், மார்க் கார்னியின் அரசாங்கம் இந்த சூழலை மாற்றியமைத்து வருகிறது.
ஜி7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும், பிரதமர் கார்னியும் சந்தித்ததிலிருந்து உறவு சீரமைப்பு தொடங்கியது. காலிஸ்தான் ஆதரவாளர்களிடமிருந்து தனது அரசை கார்னி கறாராக விலக்கி வைத்ததுடன், இந்தியாவுடனான பொருளாதார உறவை வலுப்படுத்த வலியுறுத்தினார். அனிதா ஆனந்த் உட்பட நான்கு இந்திய வம்சாவளி அமைச்சர்களை நியமித்தது அதன் தெளிவான செய்தியாக இருந்தது.
கார்னி அரசாங்கம் குடிவரவு விதிகளை இறுக்கியுள்ளது. இதன்மூலம், இந்திய மாணவர்கள் மத்தியில் நிலவும் மோசடி மற்றும் சட்டவிரோத குடியேற்ற சிக்கல்களை சரிசெய்ய முடியும் என்று நம்பப்படுகிறது.
கார்னி தனது முதல் பட்ஜெட்டில், அமெரிக்காவின் விசா சிக்கலில் சிக்கியுள்ள இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களை ஈர்ப்பதற்காக, H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு ஒரு பாதையையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தற்போதைய வர்த்தக மதிப்பு $10 பில்லியனுக்கும் குறைவாக உள்ள நிலையில், இந்த உறவு சீரமைப்பு மூலம் வர்த்தகம் அதிகரிக்க இரு நாடுகளும் விரும்புகின்றன. ட்ரம்பின் வர்த்தக போரால் உலகம் மறுவடிவமைக்கப்படும் சூழலில், கனடாவிற்கு இந்தியா ஒரு புதிய பொருளாதார மையமாக உருவாகியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
