வெறும் 100 ரூபாய்க்கு வீடு சில நிபந்தனைகளுடன் வீடு வாங்க முடியுமா? இது சாத்தியமில்லை என்று தோன்றினாலும் பிரான்சில் சில நிபந்தனைகளுடன் பங்களா வீடுகள் வெறும் 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வீடு வாங்கும் போது, குறிப்பாக பழைய வீடுகளை வாங்கும் போது, பல காரணங்கள் அதன் விலையை நிர்ணயிக்கின்றன. இடம் மற்றும் அதை சுற்றியுள்ள உள்கட்டமைப்பு, வீட்டின் வயது மற்றும் தேவைப்படும் பழுதுகள் அல்லது புதுப்பித்தல்களின் அளவு முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த காரணங்கள் பெரும்பாலும் பழைய வீடுகள் எதிர்பார்த்ததை விட குறைந்த விலையில் இருப்பதற்கு வழிவகுக்கின்றன.
ஆனால் பிரான்சின் அம்பெர்ட் நகரில் வீடுகள் இந்திய மதிப்பில் வெறும் 100 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இருப்பினும், இந்த திட்டம், நகரின் குறைந்துவரும் மக்கள்தொகையை மீட்டெடுக்கும் நோக்குடன் சில நிபந்தனைகளுடன் வருகிறது. தென்கிழக்கு பிரான்சில் அமைந்துள்ள அம்பெர்ட் நகரின் தற்போதைய மக்கள்தொகை வெறும் 6,500 பேர் மட்டுமே. எனவே இந்த பகுதியில் மக்கள் தொகையை அதிகரிக்கவே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் சில நிபந்தனைகளும் உண்டு.
100 ரூபாய் வீடுகள் முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே ஒரு வீட்டை வைத்திருப்பவர்கள் அல்லது இரண்டாவது முறையாக வீடு வாங்குபவர்கள் இந்த திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்கள்.
மற்றொரு முக்கிய நிபந்தனை என்னவென்றால், வாங்குபவர்கள் வீட்டை வாழக்கூடிய நிலைக்கு மாற்றிய பிறகு குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு அங்கு வசிக்க வேண்டும். வீட்டை வாடகைக்கு விட நினைப்பவர்கள் தகுதி பெற மாட்டார்கள். வீட்டை வாங்கிவிட்டு அதில் குடியிருக்கவில்லை என்றால் அரசு மானியத்தை ரத்து செய்து அபராதம் விதிக்கலாம்.
புதுப்பித்தல் செலவு கணிசமாக இருக்கும்!
இந்த வீடுகளில் பெரும்பாலானவை மோசமான நிலையில் உள்ளன, மேலும் விரிவான புதுப்பித்தல்கள் தேவைப்படும். மேற்கூரையைச் சரிசெய்வது, மின் அமைப்புகளை மீண்டும் மாற்றுவது முதல் சுவர்களை சரிசெய்வது வரை, வாங்குபவர்கள் பெரிய கட்டமைப்பு வேலைகளை மேற்கொள்ள வேண்டும். சில சமயங்களில், பழுதுபார்க்கும் அளவு மற்றும் காலக்கெடுவை கோடிட்டுக் காட்டும் எழுத்துப்பூர்வ புதுப்பித்தல் திட்டம் கட்டாயமாக இருக்கலாம். வீட்டை வாழக்கூடியதாக மாற்றுவதற்கான ஒட்டுமொத்த செலவு கணிசமாக இருக்கும் என்பது தெளிவாகிறது.
ஐரோப்பா முழுவதும் இதேபோன்ற திட்டங்கள்!
தென்கிழக்கு பிரான்சில் உள்ள அம்பெர்ட், குறைந்த விலையில் வீடுகளை வழங்குவதன் மூலம் மக்கள்தொகை சரிவை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டங்கள் புதிய குடியிருப்பாளர்களை ஈர்ப்பதை நோக்கமாக கொண்டவை, ஆனால் பெரும்பாலும் கடுமையான நிபந்தனைகளுடன் வருகின்றன. அம்பெர்ட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த சலுகை கவர்ச்சிகரமானதாக தோன்றினாலும், இதில் உள்ள நிபந்தனைகளை அறிந்த பிறகு எத்தனை வாங்குபவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்பது நிச்சயமற்றது.
100 ரூபாய்க்கு வீடு வாங்குவது எளிதாக இருந்தாலும், வீட்டை வாங்கியபின் புதுப்பித்தல் செலவுகள் லட்சக்கணக்கான ரூபாயை தொடலாம், இந்த வீடுகளை வாங்குபவர்கள் பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கும். இந்த சலுகை கவர்ச்சிகரமானதாக தோன்றினாலும், இது குறிப்பிடத்தக்க அபாயங்களை கொண்டுள்ளது. இருப்பினும், அம்பெர்ட் போன்ற சிறிய நகரங்களின் குறைந்துவரும் மக்கள்தொகையை மீட்டெடுக்க இத்தகைய முயற்சிகள் மிக முக்கியமானவை. சவால்களில் வாய்ப்பை காண எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள் என்பதில்தான் உண்மையான சோதனை உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
