முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனின் மனைவியும், டிரம்பை எதிர்த்து அதிபர் தேர்தலில் கடந்த 2016ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வி அடைந்த ஹிலாரி கிளிண்டன், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் அமைதி பரிசுக்கு தான் பரிந்துரைக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் உக்ரைன் தனது நிலப்பகுதிகளை விட்டுக்கொடுக்காமல், ஒரு நீடித்த சமாதான ஒப்பந்தத்தை டிரம்ப் வெற்றிகரமாக ஏற்படுத்தினால், இந்த ஆதரவை வழங்குவதாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இருவருக்கும் இடையே நீண்டகாலமாக இருந்து வரும் அரசியல் பகைமையை கருத்தில் கொண்டால், ஹிலாரி கிளிண்டனின் இந்த கருத்து உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிலாரியின் நிபந்தனை
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் டிரம்பின் முயற்சியை ஆதரித்த ஹிலாரி, “உண்மையாக சொன்னால், இந்த பயங்கரமான போருக்கு அவர் ஒரு முடிவை கொண்டுவந்தால்… உக்ரைன் ஆக்கிரமிப்பாளருக்கு தனது நிலப்பகுதிகளை விட்டுக்கொடுக்காமல் போரை முடிவுக்கு கொண்டுவந்தால்… புதினுக்கு எதிராக உறுதியாக நின்றால், கண்டிப்பாக நான் டிரம்ப்பை ஆதரிப்பேன். டிரம்ப் அந்த ஒப்பந்தத்தின் முக்கிய நபராக இருந்தால், நான் அவருக்கு நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரைப்பேன். ஏனெனில் எனது நோக்கம் புதினுக்கு சரணாகதி அடைவதை அனுமதிக்கக் கூடாது” என்று அவர் கூறினார்.
தனது சமூக வலைத்தளப் பக்கத்திலும், “உக்ரைன் தனது நிலப்பகுதியை விட்டுக்கொடுக்காமல் புதினின் போரை டொனால்ட் டிரம்ப் பேசி முடிவுக்கு கொண்டுவந்தால், நானே அவரை நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரைப்பேன்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
டிரம்ப்-புதின் உச்சி மாநாடு
ஹிலாரி கிளிண்டனின் இந்த எதிர்பாராத ஆதரவு, டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான அலாஸ்கா சந்திப்பிற்கு முன்னதாகவே வெளியானது. இந்த சந்திப்பு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு முக்கிய தருணமாக கருதப்படுகிறது. டிரம்ப் இந்த சந்திப்பு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு படி என்று விவரித்ததுடன், நிலப்பகுதி பரிமாற்றம் ஒரு ஒப்பந்தத்தின் பகுதியாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஹிலாரியின் கருத்துக்கள் உக்ரைனின் இறையாண்மைக்கு எந்தவித சமரசமும் இல்லாத ஒப்பந்தத்தை மட்டுமே ஆதரிப்பார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
ஆனால் ஹிலாரி கிளிண்டன் எதிர்பார்த்தபடி ட்ரம்ப் – புதின் பேச்சு வார்த்தைகள் எந்த விதமான முடிவும் எட்டப்படவில்லை. அதேபோல் உக்ரைன் பகுதியை ஆக்கிரமித்த நிலத்தை திருப்பி தருவேன் என்று புதின் எந்த விதமான உத்தரவாதத்தையும் தரவில்லை. அது மட்டும் இன்றி இரு தரப்புக்கும் இடையே எந்தவிதமான ஒப்பந்தமும் எட்டப்படவில்லை. போரை நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தை முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் அடுத்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் எட்டப்படும் என்றும் இருவருமே கிட்டத்தட்ட மறைமுகமாக தெரிவித்துவிட்டு தங்கள் சந்திப்பை முடித்துக் கொண்டனர். எனவே ஹிலாரி கிளின்டன் நினைத்தது நடக்கவில்லை என்பதால் அவர் ட்ரம்புக்கு நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய மாட்டார் என்று அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
