சீனாவில் 1000 டன் தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு, அனைத்து தங்கத்தையும் வெளியே எடுத்தால், சீனா அமெரிக்காவை விட பல மடங்கு பணக்கார நாடாக மாறும் எனவும் கூறப்படுகிறது.
சீனாவின் தங்க ஆராய்ச்சி மையம், நாடு முழுவதும் பல இடங்களில் தங்க இருப்பு குறித்து ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இந்த நிலையில், மத்திய மற்றும் வடகிழக்கு சீனாவில் இரண்டு தங்கச் சுரங்கப் புதையல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு சுரங்கங்களிலும் சேர்ந்து கிட்டத்தட்ட 1000 டன் தங்கம் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால், உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு முன்பு, தென் அமெரிக்காவில் உள்ள தங்கச் சுரங்கம் உலகின் மிகப்பெரியதாக இருந்த நிலையில், புதிய இந்த கண்டுபிடிப்பு அதைவிட பெரியதாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
1000 டன் தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதன் சந்தை மதிப்பு சுமார் 83 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்த தங்கச் சுரங்கத்தை உறுதி செய்ய, 3D புவியியல் கண்காணிப்பு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த தங்கச் சுரங்கம் 3000 மீட்டர் நீளமாகவும், 2500 மீட்டர் அகலமாகவும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சீன ஊடகம் ஒன்று ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளது.
உலக தங்கக் கழகம் இதுகுறித்து கருத்து தெரிவித்தபோது, “சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கச் சுரங்கம் மகிழ்ச்சி தரும் அளவிலானது. ஆனால், இதன் உண்மைத் தன்மை இன்னும் உறுதி செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
இந்த தங்கச் சுரங்கம் உறுதியாகப் போதுமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், சீனா உலகின் நம்பர் ஒன் பணக்கார நாடாக மாறக்கூடும் என்றும், உலகளவில் பொருளாதார ஆதிக்கத்தை பெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது.