ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலை.. அணு அணுவாக கண்காணித்த உளவு அமைப்பு.. சாலை கேமிரா முதல் நெட்வொர்க் வரை அனைத்தும் ஹேக்.. காமேனியின் ஒவ்வொரு அசைவையும் அறிந்த பின்னரே தாக்குதல்.. 60 வினாடிக்குக்ள் முடிந்தது 86 வயது காமேனியின் வாழ்க்கை.. இரவில் தாக்காமல் காலையில் தாக்கியதற்கும் ஒரு முக்கிய காரணம்.!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்வதற்காக இஸ்ரேல் பல ஆண்டுகளாக திட்டமிட்டு, அந்நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு வளையத்திற்குள்ளும் ஊடுருவியிருந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ‘பைனான்சியல் டைம்ஸ்’ அறிக்கையின்படி, தெஹ்ரானில்…

iran khameni

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்வதற்காக இஸ்ரேல் பல ஆண்டுகளாக திட்டமிட்டு, அந்நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு வளையத்திற்குள்ளும் ஊடுருவியிருந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

‘பைனான்சியல் டைம்ஸ்’ அறிக்கையின்படி, தெஹ்ரானில் உள்ள போக்குவரத்து கேமரா நெட்வொர்க்குகளை ஹேக் செய்த இஸ்ரேல், காமேனி மற்றும் அவரது பாதுகாப்பு படையினரின் நடமாட்டத்தை அணு அணுவாக கண்காணித்து வந்துள்ளது. பல ஆண்டுகளாக தெஹ்ரானின் சாலைகளில் உள்ள கேமராக்களில் இருந்து பெறப்பட்ட காட்சிகள் சோதனை செய்யப்பட்டு, டெல் அவிவ் மற்றும் தெற்கு இஸ்ரேலில் உள்ள ரகசிய சேவையகங்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் காமேனியின் ஒவ்வொரு அசைவையும் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் தனது கட்டுப்பாட்டு அறைக்குள் நேரலையாக பார்த்து வந்துள்ளது.

காமேனியின் தனிப்பட்ட குடியிருப்பு மற்றும் அலுவலகங்கள் அமைந்துள்ள பாஸ்டர் தெரு பகுதியை கண்காணித்த ஒரு குறிப்பிட்ட கேமரா கோணம், இஸ்ரேலிய உளவுத்துறைக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளது. அதன் மூலம் காமேனியின் மெய்க்காப்பாளர்கள் தங்கள் வாகனங்களை எங்கே நிறுத்துகிறார்கள், அவர்களின் அன்றாட வழக்கங்கள் என்ன என்பது குறித்த துல்லியமான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. 86 வயதான காமேனி யாரை சந்திக்கிறார், எப்படி தொடர்பு கொள்கிறார், அச்சுறுத்தல் ஏற்பட்டால் எங்கு தஞ்சம் புகுவார் என்பது வரை சிஎன்என் மற்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் மிக நெருக்கமாக ஆராய்ந்துள்ளனர். காமேனியுடன் அரிதாகவே ஒன்றுகூடும் ஈரானின் பிற உயர்மட்ட அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்களையும் இஸ்ரேல் இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தித் தொடர்ந்து கண்காணித்து வந்தது.

முதலில் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், எதிரியை நிலைகுலைய வைக்க பகல் நேர தாக்குதலாக அது மாற்றப்பட்டது. இஸ்ரேலிய நேரப்படி காலை 6 மணியளவில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் விமானங்கள் ஒருங்கிணைந்து தெஹ்ரானில் உள்ள உச்ச தலைவரின் வளாகத்தை குறிவைத்து துல்லியமாக இயங்கும் ஏவுகணைகளை ஏவின. வெறும் 60 வினாடிகளுக்குள் மூன்று முக்கிய இலக்குகள் தகர்க்கப்பட்டன. இந்த மின்னல் வேக தாக்குதலில் காமேனி மட்டுமல்லாது, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் தலைவர் உட்பட சுமார் 40 உயர்மட்ட அதிகாரிகள் கொல்லப்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. பகல் வெளிச்சத்தில் இத்தகைய அதிரடி தாக்குதலை ஈரான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதே இஸ்ரேலின் வெற்றிக்கான காரணமாக பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற நுணுக்கமான தாக்குதல்கள் இஸ்ரேலுக்கு புதியதல்ல. இதற்கு முன்னதாக 2024 செப்டம்பரில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை இலக்கு வைத்து ‘பேஜர்’ மற்றும் ‘வாக்கி டாக்கி’கள் மூலம் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் உலகையே அதிர வைத்தது. பேஜர்களுக்குள் வெடிமருந்துகளை மறைத்து வைத்து, அதன் ரிங்டோன்களை கூட மிக அவசரமாக தோன்றும் வகையில் மொசாட் வடிவமைத்திருந்தது. ஒரு போலி விளம்பரம் மூலம் அந்த சாதனங்கள் Waterproof என ஹிஸ்புல்லாவை நம்ப வைத்து அவற்றை வாங்க செய்துள்ளனர். இதற்காக ஹங்கேரியில் ஒரு போலி நிறுவனத்தை உருவாக்கி, தைவானின் ‘கோல்ட் அப்பல்லோ’ நிறுவனத்தையே இஸ்ரேல் ஏமாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

காமேனியின் மறைவை தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு முழுமையான போர்க்களமாக மாறியுள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, ஈரானில் உள்ள 1,250-க்கும் மேற்பட்ட இலக்குகள் இதுவரை தாக்கப்பட்டுள்ளன. ஈரானின் 11 கப்பல்கள் அழிக்கப்பட்டதுடன், குறைந்தது 10 போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. இதற்கு பதிலடியாக குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 6 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் உயர்மட்ட அரசியல் மற்றும் ராணுவ தலைமை முற்றிலுமாக சிதைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாடு தற்போது ஒரு தலைமை இல்லாத இக்கட்டான நிலையைச் சந்தித்து வருகிறது.

இந்த போர் ஈரானுடன் நின்றுவிடாமல் அண்டை நாடுகளையும் ஆட்கொண்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகம் முடங்கியுள்ளதுடன், கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கியுள்ளனர். ஈரான், இஸ்ரேல் மற்றும் லெபனானில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள இந்த மோதல், உலக பொருளாதாரத்தை ஒரு பெரும் மந்தநிலையை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளின் இந்த தொழில்நுட்ப போர், சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை ஒரு நிச்சயமற்ற இருளுக்குள் தள்ளியுள்ளது.