தென்மேற்கு பிரான்சில் உள்ள ஆர்கெல்ஸ்-கசோஸ்ட் என்ற சிறிய நகரம், அங்குள்ள அனைத்து நகராட்சி நிகழ்வுகளிலும் கோக்-கோலா குளிர்பானத்திற்கு பதிலாக, உள்ளூரில் தயாரிக்கப்படும் ஆப்பிள் ஜூஸை வழங்க தொடங்கியுள்ளது. இந்த முடிவு, அமெரிக்காவின் வர்த்தக கொள்கைக்கு எதிரான ஒரு அடையாள போராட்டமாகப் பார்க்கப்படுகிறது.
நகர மேயர் கயெல் வாலின் இந்த முடிவை “டிரம்பின் ஆக்ரோஷமான மற்றும் கொடூரமான வர்த்தக கொள்கைக்கு எதிரான அடையாள எதிர்ப்பு” என்று குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரிகளுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கோக்-கோலாவை புறக்கணிப்பதன் மூலம், உள்ளூர் பானங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு ஆதரவு அளிப்பதே மற்றொரு முக்கிய நோக்கம். இது, பிரான்ஸ் முழுவதும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பரந்த இயக்கத்துடன் ஒத்துப்போகிறது.
ஆர்கெல்ஸ்-கசோஸ்ட் நகரின் இந்த நடவடிக்கை, பிரான்சில் அமெரிக்க கொள்கைகளுக்கு எதிராக பரவி வரும் “புறக்கணிப்பு” இயக்கத்தின் ஒரு பகுதியாகும். மார்ச் 2025-இல் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் ணிப்பில், பெரும்பாலான பிரான்ஸ் மக்கள் அமெரிக்க பிராண்டுகளை புறக்கணிக்க ஆதரவு தெரிவித்தனர்.
ஏப்ரல் 2024-இல், ஒரு பிரான்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பு, கோக்-கோலா ஒரு மாபெரும் மாசுபடுத்தும் நிறுவனம் என கூறி, அதன் ஒலிம்பிக் ஜோதி ஓட்ட ஆதரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
பிரான்சில் கோக்-கோலாவுக்கு எதிரான எதிர்ப்பு என்பது புதியதல்ல. 1950-களிலேயே பிரெஞ்சு ஒயின் உற்பத்தியாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து கோக்-கோலாவை தடை செய்ய ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். அவர்கள் கோக்-கோலாவை “முதலாளித்துவத்தின் சாராம்சம்” என்று வர்ணித்தனர். அந்த முயற்சி தோல்வியடைந்தாலும், பிரான்ஸ் மக்களிடையே கோக்-கோலா நுகர்வு மற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது.
இந்தியாவில் கூட ஒரு பிரபல பல்கலைக்கழகம் மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் கோலா பானங்களை தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறிய நகரின் முடிவு, உலக வர்த்தகத்தில் அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுகள் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
