கூகுள் நிறுவனத்தில் 13 ஆண்டுகள் பணியாற்றிய மார்க்கோ மேயர் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், பெண்களுக்கு சாதகமாகவும், ஆண்களை புறக்கணிக்கும் வகையிலும் கூகுள் நிறுவனத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார்.
முக்கியமான கூட்டங்களில் ஆண்கள் உரையாற்றும்போது பெண்களால் தடைபடுவதாகவும், ஆண்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படும் சூழ்நிலை இருப்பதாகவும், பல்வேறு முக்கிய திட்டங்களில் பங்கேற்க ஆண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு, தான் பணியாற்றிய பிரிவில் மொத்தம் 14 பேர்களில் 12 பேர் ஆண்கள் மற்றும் 2 பேர் பெண்கள் இருந்ததாகவும், ஆனால் தற்போது 13 பேர் பெண்கள் மற்றும் ஒரே ஒரு ஆண் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் முற்றிலும் கூகுள் நிறுவனம் பெண்கள் ஊழியர்களுக்கு மட்டுமே அதிகாரம் அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பதவி உயர்வுக்கான பயிற்சியை பெண்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது என்றும், மேனேஜ்மென்ட் திட்டத்தில் ஆண்கள் சேர்க்கப்படுவதில்லை என்றும், பெண் ஊழியர்களுக்கே தொழில் முனைவோர் சங்க உறுப்பினர்களுக்கான கிறிஸ்துமஸ் பரிசு வழங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் சிறப்பாக செயல்பட்டும், கடந்த ஐந்து ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்கவில்லை என்றும், ஆனால் பெண்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குள் பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும், HR துறையில் பாலின பாகுபாடு அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு வழக்கு தொடர்ந்த சில நாட்களுக்குப் பிறகு கூகுள் நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்தது. இதுகுறித்து விளக்கம் கூகுள் அளித்தபோது, “தகுதியானவர்களுக்கு மட்டுமே வேலை மற்றும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது,” என்று தெரிவித்துள்ளது.
உண்மையிலேயே கூகுள் நிறுவனத்தில் பாலின பாகுபாடு உள்ளதா? ஆண் ஊழியர்கள் பாதிக்கப்படுகிறார்களா என்பது இந்த வழக்கின் முடிவில் தான் தெரியும்.