இன்றைய சூழலில் விபத்துக்கள் என்பது அதிக அளவில் தான் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் மக்களின் பரபரப்பான வாழ்க்கை தான். பள்ளிக்கு செல்வதானாலும் சரி வேலைக்கு செல்வதானாலும் சரி இந்த கடைசி நிமிட அவசரத்தில் தான் ஓடி செல்கிறார்கள். ஒரு ஐந்து நிமிடத்திற்கு முன்பாக கிளம்பி நிதானமாக செல்ல வேண்டும் என்ற மனப்பான்மை பலருக்கு இருப்பதில்லை. இந்த பதட்டத்தோடு சாலையில் செல்லும் போது சிறிய கவனக்குறைவினால் விபத்து நடந்து விடுகிறது.
இது மட்டுமல்லாமல் இளம் தலைமுறையினர் விலையுயர்ந்த பைக்கை வைத்துக் கொண்டு வேகமாக சாலையில் சென்றால்தான் கெத்து என்று நினைத்துக் கொண்டு மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். வீட்டை விட்டு வெளியே சென்று பாதுகாப்பாக சாலையில் சென்று வீட்டுக்கு திரும்புவது என்பதே தற்போதைய காலகட்டத்தில் பெரிய விஷயமாக இருக்கிறது. நாம் சரியாக சென்றாலும் எதிரில் வருபவர்கள் நேராக வரவில்லை என்றால் பாதிப்பு நமக்கும் சேர்த்து தான் ஏற்படும். என்னதான் அரசாங்கம் சாலை போக்குவரத்து பாதுகாப்பிற்கு புதிய விதிகள் கட்டுப்பாடுகள் விதித்தாலும் தனிமனித ஒழுக்கம் என்பது வேண்டும். தனி ஒருவர் சமூக அக்கறையோடு நடந்து கொண்டால் எல்லாமே இங்கு சரியாக நடக்கும்.
அதுபோல சாலை போக்குவரத்து பாதுகாப்பிற்காகவும் விபத்து ஏற்படாமல் தடுக்கவும் ஒருவேளை விபத்து நடந்து விட்டால் உடனடியாக அதிகாரிகள் சென்று நடவடிக்கை எடுப்பதற்காகவும் துபாய் அரசாங்கம் புதிய யுத்தியை ஒன்று உருவாக்கி இருக்கிறது. அது என்னவென்றால் பறக்கும் டிரோன்களை வைத்து சாலை போக்குவரத்து பாதுகாப்பை கண்காணிப்பது தான் அந்த புதுயுக்தியாகும்.
நகரம் முழுவதும் டிரோன்களை பறக்க விட்டு சாலையில் போக்குவரத்தை கேமரா மூலம் கண்காணித்து விபத்து ஒருவேளை நடந்து விட்டால் உடனடியாக அந்த இடத்திற்க்கு டிரோன்களை அனுப்பி பார்வையிட்டு அந்தந்த அதிகாரிக்கு தகவல் தெரிவித்து உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மக்களுக்கு எந்த ஒரு அசௌகரியத்தை ஏற்படாத வண்ணம் சாலை போக்குவதை சீராக கொண்டு செல்ல முடியும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது.