ஒட்டாவா: கனடாவில் துணை பிரதமர் கிறிஸ்டியா பிரீலேண்ட் திடீரென ராஜினாமா செய்துள்ளார். துணை பிரதமர் கிறிஸ்டியா பிரீலேண்டுக்கும் (வயது 56), பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் இடையே சமீபகாலமாக முரண்பாடு நிலவிய நிலையில் அவர் ராஜினமா செய்திருக்கிறார். இது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சிக்கலைஏற்படுத்தும் என்கிறார்கள்.
கனடாவின் வர்த்தகத்தில் சுமார் 75 சதவீதம் வர்த்தகம் அமெரிக்காவுடன் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்திருப்பதாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்ப் அறிவித்துள்ளார். இது கனடாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் நிதித்துறை பொறுப்பை கவனித்து வரும் துணை பிரதமர் கிறிஸ்டியா பிரீலேண்டுக்கும் (வயது 56), பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் இடையே சமீபகாலமாக முரண்பாடு நிலவி வந்திருக்கிறது. டிரம்ப்பின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த கிறிஸ்டியா தன்னை வேறு துறைக்கு மாற்றம் செய்யுமாறு பிரதமர் ஜஸ்டினிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் டிரம்பின் இந்த அறிவிப்பால் நாட்டின் பொருளாதாரம் மேலும் கேள்விக்குறியாகும் என எண்ணிய துணை பிரதமர் கிறிஸ்டியா பிரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கத்துக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
கனடா தற்போது ஒரு மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. ஜஸ்டின் ட்ரூடோவின் மந்திரிசபையில் இருந்து விலகுவதே நேர்மையான மற்றும் சாத்தியமான ஒரே வழி என்று முடிவு செய்ததாக கிறிஸ்டியா பிரீலேண்ட் தெரிவித்துள்ளார். அதோடு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் கிறிஸ்டியா பிரீலேண்ட் கூறியுள்ளார். முன்னதாக கனடா அரசின் வீட்டு வசதி துறை அமைச்சர் சீயன் பிரேச ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது .
கடந்த செம்ப்டம்பர் மாதம் முதலே ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிகள் நடநது வருகிறது.அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவி விலகுவது லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.