அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அலுமினியம் இறக்குமதிக்கு 50% வரி விதித்ததால், உலகின் முன்னணி பான நிறுவனமான கோகோ-கோலா தனது வணிக உத்திகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த திடீர் வரி உயர்வு காரணமாக அலுமினிய கேன்களில் வழங்கும் கோ – கோலாவின் விலை தாறுமாறாக உயர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, கோகோ-கோலா தனது தயாரிப்புகளுக்கான பேக்கேஜிங் முறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது.
அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட டிரம்பின் அரசாங்க கொள்கை, தற்போது உலகின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான கோகோ – கோலாவிற்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இந்த வரி விதிப்பால் ஏற்பட்ட விளைவுகளையும், அதற்கு கோகோ-கோலா எவ்வாறு தீர்வைக் காண்கிறது என்பதையும் விரிவாக பார்ப்போம்.
கோகோ-கோலா எதிர்கொள்ளும் சவால்கள்
டிரம்பின் வரி விதிப்பால் கோகோ-கோலா நிறுவனம் பல முனைகளில் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது:
உயரும் உற்பத்திச் செலவுகள்: அலுமினியத்தின் விலை அதிகரித்ததால், கேன்களின் உற்பத்தி செலவு கணிசமாக உயர்ந்துள்ளது. இது நிறுவனத்தின் லாப வரம்பை குறைத்து, நுகர்வோரின் மீது விலை உயர்வுக்கான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
மாறும் நுகர்வோர் எதிர்பார்ப்புகள்: தற்போதைய சூழலில் நுகர்வோர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை அதிகம் எதிர்பார்க்கிறார்கள். இந்த நேரத்தில் அலுமினிய கேன்களின் விலை உயர்ந்தால், அதை விட்டுவிட்டு வேறு பொருட்களை நுகர்வோர் நாடுவார்கள்.
சுற்றுச்சூழல் கவலைகள்: அலுமினியம் கேன்கள் மறுசுழற்சி செய்யக்கூடியவை என்பதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் விரும்பப்படுகின்றன. ஆனால், இதன் விலை உயர்வால் கோகோ-கோலா பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டால், அது சுற்றுச்சூழல் பாதிப்புகளை அதிகரிக்கக்கூடும்.
கோகோ-கோலாவின் புதிய அணுகுமுறைகள்
இந்த சவால்களை எதிர்கொள்ள கோகோ-கோலா பல்வேறு புதிய உத்திகளை விரைவாக செயல்படுத்தி வருகிறது.
மாற்று பேக்கேஜிங்: அலுமினிய கேன்களுக்குப் பதிலாக, பி.இ.டி (PET) பிளாஸ்டிக் பாட்டில்களை அதிகம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இது செலவை குறைப்பதுடன், விநியோக சங்கிலிக்கு ஒரு மாற்று வழியையும் வழங்கும்.
விலை மாற்றம்: உற்பத்தி செலவைக் கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில், நுகர்வோர்களுக்கு விலை உயர்வை அறிவிக்கலாம் என்று நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
வர்த்தக நிவாரணத்திற்கான முயற்சிகள்: அமெரிக்க அரசின் வர்த்தக கொள்கைகளில் மாற்றம் கொண்டுவர அழுத்தம் கொண்டு குறித்தும் கோகோ-கோலா யோசித்து வருகிறது. இந்த தடையை நீக்க அல்லது குறைக்க அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் நீண்ட காலத் தீர்வை அடைய முடியும் என நிறுவனம் நம்புகிறது. ஒருவேளை அரசு தங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் நிறுவனத்தை வேறு நாட்டிற்கு மாற்றும் திட்டமும் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு தனிப்பட்ட மனிதர் எடுக்கும் சில தவறான முடிவுகள் , உலகின் பெரிய நிறுவனங்களையும், அந்நிறுவனங்களின் அன்றாட வணிகத்தையும் நேரடியாக பாதிக்கின்றன என்பதற்கான இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
