‘கண்ணாடியைத் திருப்பினா எப்படி ஆட்டோ ஓடும்?’ என்ற அஜித் படத்தின் நகைச்சுவை வசனத்தை போல, கருத்தடை சாதனங்களின் விலையை உயர்த்தினால் குழந்தை பிறப்பு விகிதம் உயருமா என்ற கேலியான கேள்வியுடன் சீன அரசின் புதிய நடவடிக்கையை உலக நாடுகளும் மருத்துவ நிபுணர்களும் கலாய்த்து வருகின்றனர்.
2026-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் கருத்தடை சாதனங்கள் மற்றும் மாத்திரைகள் மீதான 13 சதவீத வரி விதிப்பை சீனா அமலுக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த வரி விலக்கை ரத்து செய்து, பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா எடுக்கும் இந்த ‘விசித்திரமான’ முயற்சி, அந்நாட்டு இளைஞர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் அந்நாடு சந்தித்து வரும் கடுமையான மக்கள் தொகையியல் நெருக்கடியாகும். 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சரிவைச் சந்தித்துள்ளது. சுமார் 9.5 மில்லியன் குழந்தைகள் மட்டுமே பிறந்த நிலையில், இது ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய எண்ணிக்கையை விட மூன்றில் ஒரு பங்கு குறைவானதாகும். முதியவர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தை தாண்டி வேகமாக அதிகரித்து வரும் வேளையில், உழைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை சுருங்கி வருவது சீன பொருளாதாரத்தின் அடித்தளத்தையே அசைத்து பார்க்கிறது. உழைப்பாளர் பற்றாக்குறை ஏற்பட்டால், உற்பத்தி பாதிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக இருக்கும் சீனாவின் அந்தஸ்து கேள்விக்குறியாகும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சுகாதார நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் இந்த வரி விதிப்பு குறித்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். “காண்டம் விலையை உயர்த்துவது என்பது பாதுகாப்பற்ற உறவுகளுக்கும், தேவையற்ற கருக்கலைப்புகளுக்கும் மற்றும் பால்வினை நோய்கள் பரவுவதற்கும் வழிவகுக்குமே தவிர, மக்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள இது ஒரு காரணமாக இருக்காது” என்று அவர்கள் வாதிடுகின்றனர். குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர் மற்றும் மாணவர்கள் மத்தியில் கருத்தடை சாதனங்களின் பயன்பாடு குறைந்தால், அது எதிர்காலத்தில் மிகப்பெரிய பொது சுகாதார செலவுகளை அரசுக்கு ஏற்படுத்தும். ஒரு கருத்தடை சாதனத்தின் விலையை விட, ஒரு குழந்தையை வளர்ப்பதற்கான கல்வி, மருத்துவ செலவுகள் பல ஆயிரம் மடங்கு அதிகம் என்பதை அரசு உணரவில்லை என அவர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இந்தியாவை பார்த்துச் சீனா கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்றும் இதில் பொதிந்துள்ளது. இந்தியா தற்போது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுத்துள்ளதோடு, ‘இளம் உழைப்பாளர்களின் தேசம்’ என்ற பெருமையையும் பெற்றுள்ளது. சீனா ஒரு காலத்தில் ‘ஒரே குழந்தை’ கொள்கையை திணித்து இன்று அதன் விளைவுகளை அனுபவித்து கொண்டிருக்கிறது. மாறாக, இந்தியா போன்ற நாடுகள் ஜனநாயக ரீதியாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. உழைக்கும் இளைஞர்களின் ஆற்றலால் இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வரும் வேளையில், சீனா தனது வீழ்ச்சியை தடுக்க தள்ளாடி கொண்டிருப்பது சர்வதேச அளவில் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
பொருளாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, சீனாவின் உண்மையான பிரச்சனை கருத்தடை சாதனங்கள் அல்ல; மாறாக அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகளும், வேலையில்லா திண்டாட்டமும்தான். ஒரு குழந்தைக்கான கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான செலவு சராசரி வருமானத்தை விட அதிகமாக இருக்கும்போது, வெறும் 13 சதவீத வரி விதிப்பு எத்தகைய மாற்றத்தையும் தராது. சீன அரசு தற்போது குழந்தை வளர்ப்பிற்காக பல்வேறு நிதி உதவிகளையும், மகப்பேறு விடுமுறை சலுகைகளையும் அறிவித்திருந்தாலும், இளைஞர்களிடையே நிலவும் எதிர்காலம் குறித்த அச்சம் அவர்களை திருமணத்திலிருந்தும் குழந்தை பேற்றிலிருந்தும் விலக்கியே வைத்திருக்கிறது.
முடிவாக, சீனா தனது மக்கள்தொகை கொள்கையில் எடுத்துள்ள இந்த தலைகீழ் மாற்றம் ஒரு ‘சமூக சூதாட்டம்’ என்றே விமர்சிக்கப்படுகிறது. 1990-களில் மக்கள் தொகையை குறைக்க திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், இன்று நாட்டை முதியோர் இல்லமாக மாற்றி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையான மக்கள்தொகை வளர்ச்சியை செயற்கையான வரி விதிப்புகள் மூலம் கட்டுப்படுத்தவோ அல்லது தூண்டவோ முயல்வது பல நேரங்களில் எதிர்மறையான விளைவுகளையே தரும்.
2026-ல் சீனா எடுத்துள்ள இந்த விசித்திரமான முயற்சி, அந்நாட்டின் பொருளாதார வல்லரசு கனவை சிதைக்குமா அல்லது நிமிர்த்துமா என்பது அடுத்த சில ஆண்டுகளில் தெரிந்துவிடும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
