இந்தியா மற்றும் சீனா இடையே அருணாச்சலப் பிரதேச விவகாரம் உட்பட பல கருத்து வேறுபாடுகள் இருந்து வரும் நிலையில் அவ்வப்போது மோதல் போக்கையே இந்தியாவுடன் சீனா நடந்து கொண்டது. ஆனால் தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகப்படியான வரி விதித்ததன் காரணமாக இந்தியாவின் நட்புறவை பெற சீனா முன்வந்துள்ளதாக தெரிய வருகிறது. அதன்படி சமீபத்தில் இந்தியர்கள் எங்களது நண்பர்கள், மாணவர்கள் விசா உள்பட எந்த விசா வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என திடீரென தனது கொள்கையை மாற்றி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரி நடவடிக்கைகளுக்குப் பின்னர் உலக சந்தைகள் பாதிக்கப்பட, அதில் சீனா மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சீன இறக்குமதிகளில் 145% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு அரசுகளும் இலக்கியம், சுற்றுலா மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தத் தயார் என தெரிவித்துள்ளன. சீனா தனது பயணக் கொள்கைகளை தளர்த்தியது இதற்கான ஒரு முன்னோடியாக பார்க்கப்படுகிறது.
இந்தியர்களுக்கு சீன தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் 85,000க்கும் அதிக சமீபகாலத்தில் மட்டும் விசாக்களை வழங்கியுள்ளன. மேலும் பல இந்திய நண்பர்கள் சீனாவுக்கு வந்து, திறந்த, பாதுகாப்பான, உற்சாகமான, நேர்மையான மற்றும் நட்பான சீனாவைப் பார்வையிட வரவேற்கிறோம்,” என சீன தூதுவர் Xu Feihong ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சீனா வழங்கியுள்ள 85,000 விசாக்களை பெற்ற பெரும்பாலான இந்தியர்களில் மாணவர்கள், வணிக நிபுணர்கள், சுற்றுலா பயணிகள், அரசு அதிகாரிகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் சர்வதேச மாநாடுகள் அல்லது கல்வி நிகழ்வுகளில் பங்கேற்கும் நபர்களும் உள்ளனர்.
இந்திய பயணிகளை அதிகம் ஈர்க்கும் நோக்கில், சீனா விசா விதிமுறைகளை தளர்த்தியுள்ளது என்றும், இந்தியர்கள் விசா மையங்களில் நேரடியாக வேலை நாட்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் முன்பதிவு தேவையில்லை, குறுகிய கால பயணத்திற்கு செல்லும் இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் தகவல்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியர்களுக்கு சீன விசா பெறும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், விசாக்கள் விரைவாக வழங்கப்படுகின்றன என்றும், இது வணிகமும், சுற்றுலாவும் சார்ந்த பயணிகளுக்கு பலனளிப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியர்கள் புதுடெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள Chinese Visa Application Service Centres (CVASC) மூலம் சீனாவிற்கான விசாவுக்கு விண்ணப்பித்தால் தற்போதைய நிலவரப்படி உடனே விசா கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.