சர்வதேச வர்த்தகம் சில சமயங்களில் ஒரு கிரிக்கெட் போட்டியை போல இருக்கும். பல ஆண்டுகளாக ஒரு அணி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், திடீரென மற்றொரு அணி எதிர்பாராத வகையில் களத்தில் இறங்கி, ஆட்டத்தையே மாற்றியமைக்கும். சோயாபீன்ஸ் வர்த்தகத்தில் தற்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
பல ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய சோயாபீன்ஸ் நுகர்வோரான சீனாவுக்கு அமெரிக்காதான் முக்கிய வர்த்தக பங்குதாரராக இருந்தது. சீனாவின் விலங்கு தீவனம் மற்றும் சமையல் எண்ணெய் தேவைகளுக்கு சோயாபீன்ஸ் ஒரு அத்தியாவசிய பொருளாகும். ஆனால், டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு வர்த்தக போர் தொடங்கியதும், கடுமையான வரிகளை விதித்தது. உடனே சீனா, “சரி, நாங்கள் வேறு இடங்களில் கொள்முதல் செய்கிறோம்” என்று பதிலடி கொடுத்தது. அதன்பின்னர், பிரேசில் வர்த்தக களத்தில் நுழைந்தது.
கடந்த ஓராண்டில் பிரேசில், சோயாபீன்ஸ் வர்த்தகம் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த ஜூலை மாதம் மட்டும், சீனா தனது மொத்த சோயாபீன்ஸ் தேவையில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தை பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. அதன் அளவு 10 மில்லியன் டன்களுக்கும் அதிகம். அதேசமயம், அமெரிக்காவில் இருந்து வெறும் 4 சதவீதம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு கிரிக்கெட் போட்டியில் 100 பந்துகளில் வெறும் 4 ரன்கள் எடுத்தது போன்ற மோசமான நிலை.
அமெரிக்க விவசாயிகளுக்கு இது மிகவும் மோசமான ஒரு தருணம். அமெரிக்காவில் அறுவடை காலம் தொடங்கவுள்ள நிலையில், கிடங்குகளில் விற்கப்படாத சோயாபீன்ஸ் குவியலாக கிடக்கின்றன. ‘எங்கள் மிகப்பெரிய வாடிக்கையாளர் இல்லாமல் எங்களால் வாழ முடியாது’ என்று விவசாயிகள் டிரம்ப்புக்கு கடிதம்கூட எழுதினர். இந்த வர்த்தக போர் சோயாபீன்ஸ் துறையை மட்டும் பாதிக்கவில்லை. அயோவா மற்றும் இல்லினாய்ஸ் போன்ற மாநிலங்களில் உள்ள ஒட்டுமொத்த கிராமப்புற பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. டிராக்டர்கள் விற்பனை குறைந்துள்ளன, கிராமப்புற வங்கிகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
இந்த வர்த்தக மாற்றத்திற்கு பின்னால் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரேசில் அதிபர் லூலா இடையிலான நெருக்கமான உறவும் ஒரு காரணமாகும். சீன தேவைகளுக்கு ஏற்றவாறு தனது விவசாய மற்றும் ஏற்றுமதி உள்கட்டமைப்பை பிரேசில் மாற்றியமைத்துள்ளது. பிரேசிலின் வளமான நிலங்கள், மிகப்பெரிய பண்ணைகள் மற்றும் மலிவான உற்பத்தி ஆகியவை அதற்கு சாதகமாக அமைந்துள்ளன.
அமெரிக்காவும் சீனாவும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினால், சோயாபீன்ஸ் ஒரு முக்கிய பேரம் பேசும் பொருளாக இருக்கலாம். ஆனால், பிரேசில் விநியோக சங்கிலியில் சீனா ஏற்கெனவே பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது. எனவே, அமெரிக்கா மீண்டும் களத்தில் இறங்கினாலும், அது முன்னர் இருந்த ‘முக்கிய வீரனாக’ இருக்க முடியாது.
இது வெறும் சோயாபீன்ஸ் பற்றியது மட்டுமல்ல. பிரிக்ஸ் நாடுகள் (பிரேசில், இந்தியா, ரஷ்யா, சீனா) படிப்படியாக மேற்கத்திய நாடுகளைச் சார்ந்திருப்பதை குறைத்து, தங்களுக்குள்ளேயே வர்த்தக உறவுகளை வலுப்படுத்தி வருகின்றன என்பதற்கான ஒரு அறிகுறி இது. இன்று சோயாபீன்ஸ், நாளை எண்ணெய், கோதுமை அல்லது தொழில்நுட்பமாக இருக்கலாம். இந்த சர்வதேச வர்த்தகப்போட்டியில் அமெரிக்கா ஓரம் கட்டப்பட்டுள்ளது. அதேசமயம், சீனாவுக்கு இப்போது பிரேசில், ‘போட்டியின் நாயகனாக’ உருவெடுத்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
