இந்த உலகில் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் நிச்சயம் நிறைய ஆசைகள் இருக்கும். பலரும் அதனை தங்களது வாழ்நாளுக்குள் நிச்சயம் நிறைவேற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாக நடை போட்டு அதில் வெற்றியும் அடைவார்கள். ஆனால் இன்னொரு பக்கம் அவற்றை நிறைவேற்ற முடியாமல் பலரும் தோல்வி அடைந்து வாழ்நாள் முழுக்க அதை கனவாகவே எண்ணி ஏக்கத்துடனும் இருப்பார்கள்.
முன்பெல்லாம் குறிப்பிட்ட வயதுக்குள் சாதித்தே தீர வேண்டும் என்ற நெருக்கடிக்கு நடுவே ஓடிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், எதை சாதிக்க வேண்டுமானாலும் வயது ஒரு தடையே இல்லை என்பதை சொல்வதுடன் மட்டுமில்லாமல் அதனை பலரும் நிறைவேற்றி வருகின்றனர். அப்படி எந்த வயதிலும் நமது கனவை நிறைவேற்ற முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக ஒரு 102 வயது மூதாட்டி இருப்பதையும் அவர் என்ன கனவை நிறைவேற்றினார் என்பதையும் தற்போது பார்க்கலாம்.
102 வயதில் சாதனை
US நாட்டின் கலிஃபோர்னியா பகுதியை சேர்ந்தவர் தான் டோரதி ஸ்மித் (Dorothy Smith). இவருக்கு தற்போது 102 வயதாகும் நிலையில், சமீபத்தில் தனது வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு கனவையும் நிறைவேற்றி வியக்க வைத்துள்ளார். பொதுவாக, பலரும் ஒவ்வொரு நாடாக சுற்ற வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அதற்காக கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து அந்த நேரத்தில் தங்கள் வாழ்வின் பொன்னான தருணங்களை களிக்கவும் செய்வார்கள்.
அப்படி தான் டோரதி ஸ்மித்துக்கும் ஒரு லட்சியம் இருந்துள்ளது. மொத்தமுள்ள 7 கண்டங்களையும் சுற்றி பார்க்க வேண்டுமென விரும்பியுள்ள டோரதி, ஆசியா, வட அமெரிக்கா, தெற்கு அமெரிக்கா, அண்டார்டிகா, ஐரோப்பா என 6 கண்டங்களில் ஏற்கனவே சென்று விட்டார். ஆனால், ஆஸ்திரேலியா மட்டும் மீதமிருக்க, சமீபத்தில் அங்கேயும் சென்று தனது நேரத்தை டோரதி கழித்ததன் மூலம் உலகின் 7 கண்டங்களையும் நேரில் சென்று பார்த்த வயதான பெண்மணி என்ற பெயரும் அவருக்கு கிடைத்துள்ளது.
பெரிய இன்ஸ்பிரேஷன்
அதிகம் முதுமையை அடைந்து விட்டதால் வீல் நாற்காலியில் பயணம் மேற்கொள்ளும் டோரதி ஸ்மித் இது பற்றி பேசுகையில், “இந்த பெரிய உலகில் ஒவ்வொரு நாடும் வித்தியாசமாக இருப்பதுடன் அங்கே நிறைய புதுமையான விஷயங்களும் உள்ளது. இதனால் பயணம் என்பது எனக்கு மிக முக்கியமான விஷயம். இவை அனைத்தையும் நேரில் பார்ப்பதுடன் எதையும் தவறவிடக்கூடாது என்பது என் விருப்பம்” என தோற்றத்தில் கூறியுள்ளார்.
மேலும் தான் சாகச பயணம் மேற்கொள்வதற்கு வயது ஒரு பொருட்டே இல்லை என்றும் கூறும் டோரதி ஸ்மித், தங்களால் சாதிக்கும் வயதை கடந்து விட்டதாக கருதும் பலருக்கும் நிச்சயம் மிகப்பெரிய இன்ஸபிரேஷன் தான்.