உலகில் உள்ள அனைத்து குழந்தைகளும் கிட்டத்தட்ட தாய்ப்பாலை ருசித்து இருப்பார்கள் என்றாலும் குழந்தை பருவமாக இருக்கும் காலத்தில் தாய்ப்பால் குடித்ததால் அதன் சுவை எப்படி இருக்கும் என்பது யாருக்குமே ஞாபகம் இருக்காது. இந்த நிலையில் அமெரிக்க நிறுவனம் தாய்ப்பாலின் சுவை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா? உங்களுக்காக ஒரு வாய்ப்பு என கூறி தாய்ப்பால் சுவையுடன் கூடிய ஐஸ் கிரீமை தயாரித்து விற்பனை செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் பிரபல நிறுவனமான Frida என்ற நிறுவனம் தாய்ப்பால் சுவையுடைய ஐஸ்கிரீமை இன்னும் ஒன்பது மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்து அந்த ஐஸ்கிரீம் தயாரிப்பது எப்படி என்பது குறித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பெண்களின் மார்பகத்தில் இருந்து எடுக்கப்படும் தாய்ப்பால் உடன் சில பொருட்களை கலந்து ஐஸ்கிரீம் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த ஐஸ்கிரீம் இனிப்பு, கொஞ்சம் பருப்பு கலந்த நறுமணம், உப்பு தன்மை கொண்டது என்றும் அது தான் தாய்ப்பாலின் சுவையாக இருக்கும் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளது. மேலும் தாய்ப்பாலை பரிமாறும் அனுபவத்தையும் முயற்சி செய்யுங்கள் என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாய்ப்பாலின் சுவை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள இந்த ஐஸ்கிரீமை சாப்பிடுங்கள் என்று அந்த வீடியோவில் கூறப்பட்டிருந்தாலும் இந்த ஐஸ்கிரீமில் உண்மையில் தாய்ப்பால் சேர்க்கப்படாது என்றும் அதற்கு பதிலாக தாய்ப்பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கு இணையான பொருள்கள் அதாவது லாக்டோஸ், புரதம், விட்டமின், கனிமங்கள் சேர்க்கப்படும் என்றும் தெரிகிறது.
இந்த வீடியோ வெளியாகி இணையதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சிலர் இதை ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கான முட்டாள்கள் தினத்திற்கான செய்தியாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். இருப்பினும் இன்னும் ஒன்பது மாதங்களில் இந்த ஐஸ்கிரீம் வெளிவந்தே தீரும் என்று Frida நிறுவனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது