சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, உலக அரசியலில் ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில், இந்தியாவும் சீனாவும் தனிப்பட்ட முறையில் ஒருவரையொருவர் வரவேற்று, அமெரிக்காவின் ஆதிக்கத்திற்குப் பதிலடி தரும் வகையில், புதிய இராஜதந்திர உறவுகளை முன்னெடுத்துள்ளன. இரு நாடுகளின் தலைவர்கள் இடையேயான சந்திப்புகள், உலக அரசியல் வல்லுநர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சீனாவின் சிவப்புக் கம்பள வரவேற்பு
மாநாட்டிற்கு வந்த இந்திய பிரதமருக்கு சீன அரசு சார்பில் தனிப்பட்ட முறையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இது வெறும் மரபு சார்ந்த வரவேற்பு அல்ல; இரு நாட்டு தலைவர்களும் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இது, இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவு எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. இரு நாட்டு தலைவர்களின் உடல் மொழியும், பரஸ்பர மரியாதையும், “டிராகனும், யானையும் ஒன்றிணைய வேண்டும்” என்ற கொள்கையை உறுதிப்படுத்தியதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரதமரை சீன அதிபர் நேரடியாக வந்து வரவேற்கவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டாக உள்ளது. இந்திய பிரதமரும், சீன அதிபரும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் சந்திப்பாக இருந்தால் மட்டுமே இந்திய பிரதமரை சீன அதிபர் வரவேற்பார் என்பது நடைமுறை. ஆனால் இந்த மாநாட்டிற்கு மொத்தம் 15 நாட்டு அதிபர்கள் கலந்து கொண்டனர். எனவே எல்லோரையும் சீன அதிபர் நேரடியாக வரவேற்பதில்லை என்பதால் அதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.
இந்த மாநாட்டில், பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகிய கொள்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய உணர்வுத்திறன் மதிக்கப்பட வேண்டும் என்பது விவாதத்திற்கு வந்தன.
இந்த மாநாட்டில் பங்கேற்ற இந்தியா, ரஷ்யா, மற்றும் சீனா ஆகிய நாடுகள், பிராந்திய அளவில் அமெரிக்காவிற்கு எதிராக ஒரு புதிய அதிகார சமநிலையை உருவாக்க முயல்வதாக கூறப்படுகிறது.
இந்த மாநாட்டின் மூலம், “ஒட்டுமொத்த உலகளாவிய அதிகாரத்தையும் மாற்றியமைக்கும் ஒரு செயல்” நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஒருகாலத்தில் அமெரிக்காவை மையமாக கொண்டிருந்த உலக அரசியல், இப்போது ஆசியாவை மையமாக கொண்டதாக மாறி வருகிறது. ரஷ்யா, சீனா, இந்தியா, ஈரான் போன்ற நாடுகள் பிராந்திய ரீதியாக ஒன்றிணைந்து, அமெரிக்காவின் ஆதிக்கத்தை குறைக்க முயற்சிக்கின்றன.
தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்து, இந்தியா, ரஷ்யா, மற்றும் சீனா ஒருமித்த கருத்துக்கு வந்தன. இது பரஸ்பர ஒத்துழைப்புக்கு ஒரு புதிய தளத்தை அமைத்துள்ளது.
இந்த மாநாடு இந்தியாவுக்கு ஒரு முக்கியமான தருணம். அமெரிக்காவுடன் முரண்பட்ட நிலையிலும், ரஷ்யா மற்றும் சீனா போன்ற முக்கிய நாடுகளுடன் ஒரு நல்லுறவை வளர்த்து கொள்வதன் மூலம், தனது வெளியுறவு கொள்கையில் இந்தியா சுதந்திரமாக செயல்படுகிறது என்பதை நிரூபித்துள்ளது.
இந்த மாநாட்டின் முடிவுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளை விட, ஆசியாவின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. இது, எதிர்கால உலக அரசியலில் ஆசிய நாடுகள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.
இந்த மாநாட்டின் முடிவுகள், புதிய அதிகார சமநிலை மற்றும் ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
