அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. அவற்றில் முதலாவது அரசியல் தலையீடு. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஃபெடரல் ரிசர்வின் கட்டுப்பாட்டை தன் வசம் கொண்டு வர விரும்புகிறார். அடுத்த ஆண்டு இறுதியில் ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலின் பதவிக்காலம் முடிவடைகிறது. டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்ததால், தனக்கு சாதகமான ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்க முயற்சிப்பார். இது ஃபெடரல் ரிசர்வ் என்ற சுதந்திரமான அமைப்பின் நம்பகத்தன்மைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக, அமெரிக்க டாலரின் மதிப்பு பலவீனமடையும். டிரம்ப் தொடர்ந்து ஃபெடரல் ரிசர்வுக்கு எதிராக செயல்படுவதால், சர்வதேச முதலீட்டாளர்கள் டாலரை நம்புவது குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இரண்டாவது அம்சம், சந்தையின் எதிர்பார்ப்பு. ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல், வட்டி விகிதத்தை குறைக்கப்போவதாக ஏற்கனவே சூசகமாக தெரிவித்துவிட்டார். இது சந்தையில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தை வட்டாரத்தில், வட்டி விகிதம் 0.5% குறைக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம், பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்கள் ஆகியவற்றின் சமீபத்திய செயல்பாடுகள் இந்த எதிர்பார்ப்பை உறுதிப்படுத்துகின்றன.
ஒருவேளை ஃபெடரல் ரிசர்வ் 0.25% மட்டுமே குறைத்தால், சந்தையில் ஒரு சிறிய சரிவு ஏற்படக்கூடும். குறிப்பாக தங்கம் மற்றும் பங்குகள் தற்காலிகமாக ஒரு மோசமான விளைவை சந்திக்கலாம். ஆனால், எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு 0.5% வட்டி விகிதம் குறைக்கப்பட்டால், சந்தையில் ஒரு கொண்டாட்டமான எழுச்சி ஏற்படக்கூடும். டாலர் பலவீனமடையும், தங்கம் தனது தற்போதைய நிலையைத் தக்கவைத்து கொள்ளலாம் அல்லது மேலும் உயரலாம்.
ஃபெடரல் ரிசர்வுக்கு இரண்டு முக்கிய பொறுப்புகள் உள்ளன: ஒன்று, வேலைவாய்ப்பு மட்டத்தை நிர்வகிப்பது, மற்றொன்று, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது. ஆனால், இந்த இரண்டு இலக்குகளும் தற்போது ஒன்றுக்கொன்று எதிர் திசையில் நகர்ந்து கொண்டிருக்கின்றன. வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. அதே நேரத்தில், பணவீக்கம் மெதுவாக அதிகரித்து வருகிறது.
அதிபர் டிரம்ப்பின் வர்த்தக வரிகளால் ஏற்படும் முழுமையான விளைவுகள் இன்னும் உணரப்படவில்லை. டிசம்பர்-ஜனவரி மாதவாக்கில் பணவீக்கம் 3.5% முதல் 4% வரை அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், ஃபெடரல் ரிசர்வ் தலைவர் பவல் 0.5% வட்டி விகிதத்தை குறைத்தால், அது ஏற்கனவே மூன்று முறை குறைப்புகளுக்கு சமமாக இருக்கும். இது எதிர்காலத்தில் தேவைப்படும் போது வட்டி விகிதங்களை மேலும் குறைக்க அவரிடம் எந்த ஒரு ஆயுதமும் இல்லாத ஒரு நிலையை உருவாக்கும்.
அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் முதலீடுகளை சார்ந்துள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த AI துறை அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில்லை. இது ஒருவித செயற்கையான பொருளாதார ஏற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த AI ஏற்றம் சரிந்தால், அமெரிக்க பொருளாதாரம் பலவீனமடையும்.
பணவீக்கம் 3.5% முதல் 4% வரை இருக்கும்போது, எந்தவொரு மத்திய வங்கி தலைவரும் வட்டி விகிதங்களை அதிகமாக குறைக்க மாட்டார். நீண்ட காலமாக வட்டி விகிதங்கள் குறைவாக இருந்த காலம் முடிந்துவிட்டது என்பதை இது காட்டுகிறது. வரிகள் காரணமாக பணவீக்கம் அதிகரித்தால், டிரம்ப் தனது பதவிக்காலத்தின் பிற்பகுதியில் மீண்டும் வட்டி விகிதங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம்.
தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பங்கள் காரணமாக, முதலீட்டாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். பணவீக்கம் எந்த நிலைக்கு செல்லும் என்பது உறுதியாக தெரியவில்லை. டிரம்ப் தனது வரி கொள்கையை மாற்றி கொள்வாரா, அல்லது நீதிமன்றம் தலையிடுமா என்பது போன்ற பல நிச்சயமற்ற தன்மைகள் உள்ளன. எனவே, தங்கம் உட்பட எந்தவொரு முதலீட்டிலும் மிக அதிக ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அடுத்த 6 முதல் 9 மாதங்களுக்கு தங்கம் உட்பட சந்தை மிகவும் நிலையற்றதாக இருக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
