எல்லோரும் இந்தியா போல் ஆக முடியுமா? ஆஸ்திரேலியாவின் முதல் ராக்கெட் முயற்சி தோல்வி: 14 வினாடிகளில் வெடித்து சிதறியது..!

ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்ட முதல் சுற்றுவட்ட பாதை ராக்கெட்டான ‘எரிஸ்’ ஜூலை 30 அன்று ஏவப்பட்ட நிலையில், அந்த ராக்கெட் புறப்பட்ட 14 விநாடிகளில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இது, ஆஸ்திரேலியாவின் விண்வெளி…

australia

ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்ட முதல் சுற்றுவட்ட பாதை ராக்கெட்டான ‘எரிஸ்’ ஜூலை 30 அன்று ஏவப்பட்ட நிலையில், அந்த ராக்கெட் புறப்பட்ட 14 விநாடிகளில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இது, ஆஸ்திரேலியாவின் விண்வெளி திட்டத்திற்கு ஒரு தற்காலிக பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்த 25 மீட்டர் உயர ராக்கெட், வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள போவன் சுற்றுவட்டப் பாதை விண்வெளி தளத்திலிருந்து புறப்பட்டது. இந்த இடம் பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால், எரிபொருள் சேமிப்புக்கு உகந்தது என்றும் கணிக்கப்பட்டது. ஆனால் ராக்கெட் விண்ணில் சீறி பாய்ந்த சில விநாடிகளிலேயே நிலைத்தன்மையை இழந்து விபத்துக்குள்ளானது.

ராக்கெட்டில் இருந்த நான்கு -எரிபொருள் என்ஜின்களும் திட்டமிட்டபடி இயங்கின. ராக்கெட் 14 விநாடிகள் வரை பறந்து, பின்னர் கீழே விழுந்தது. விபத்து காரணமாக ஏவுதளத்தின் எந்தப் பகுதிக்கும் சேதம் ஏற்படவில்லை.

முன்னதாக இந்த ராக்கெட் அனுப்பும் திட்டம் சில தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் வானிலை காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்டன. ராக்கெட் விபத்துக்குள்ளானபோதிலும், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆடம் கில்மோர், இந்த முயற்சியை ஒரு “முக்கிய மைல்கல்” என்று வர்ணித்தார். தனியார் நிறுவனங்களின் முதல் சுற்றுவட்டப் பாதை ஏவுதல் முயற்சிகளில் பெரும்பாலானவை தோல்வியடையும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

விண்வெளி துறையில் பெரும் வளர்ச்சி அடையாத ஆஸ்திரேலியா, தனது செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த வெளிநாட்டு ராக்கெட்டுகளை சார்ந்திருந்தது. ‘எரிஸ்’ ராக்கெட் இந்த நிலையை மாற்றும் நோக்குடன் உருவாக்கப்பட்டது.

இருப்பினும் 2030-ஆம் ஆண்டிற்குள் $12 பில்லியன் மதிப்பிலான உள்நாட்டு விண்வெளி பொருளாதாரத்தை உருவாக்க ஆஸ்திரேலியா இலக்கு வைத்துள்ளது. இந்த தோல்வி ஒரு பின்னடைவாக இருந்தாலும், ராக்கெட் தொழில்நுட்பத்தின் ஆரம்ப கட்டத்தில் இதுபோன்ற தோல்விகள் சகஜம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்தத் தோல்விக்கான முழுமையான ஆய்வு முடிவுகளை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. எனினும் விபத்துக்கான காரணத்தை கண்டறிய தரவுகளை ஆய்வு செய்து வருவதாகவும், அடுத்த சோதனை ஏவுதலுக்கு முன் வடிவமைப்பை மேம்படுத்துத திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

விண்வெளி துறையில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில் எல்லோரும் இந்தியா போல் மாறிவிட முடியுமா என்று இந்த செய்திக்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://x.com/RT_com/status/1950531986394632581