ஆஸ்திரேலியாவில் உள்ள சமூக ஊடக சட்ட வரலாற்றிலேயே மிகவும் கடுமையான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, டிசம்பர் 10ஆம் தேதி முதல், 16 வயதுக்கு குறைவான பயனர்களை தங்கள் தளங்களிலிருந்து நீக்குவதற்கு மெட்டா (Meta), டிக்டாக் (TikTok), ஸ்னாப்சாட் (Snapchat) போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த நடவடிக்கை புரட்சிகரமானதாக கருதப்பட்டாலும், இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்று நிறுவனங்களே கவலை தெரிவித்துள்ளன.
புதிய சட்டத்தின்படி, சமூக ஊடக தளங்கள் தங்கள் தளங்களில் உள்ள வயது குறைந்த பயனர்களை கண்டறிந்து நீக்க வேண்டும். இதில் தவறும் பட்சத்தில், சுமார் 32.5 மில்லியன் அமெரிக்க டாலர் வரை அபராதம் செலுத்த நேரிடும்.
இது, டிஜிட்டல் உலகில் குழந்தை பருவத்தை வடிவமைத்துள்ள அல்காரிதம்களுக்கு நேரடி சவால் விடுத்துள்ளதுடன், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை இணங்க செய்துள்ளது. சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட உள்ள நிலையில், முன்னணி நிறுவனங்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன:
மெட்டா (Meta): பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, சட்டத்திற்கு கட்டுப்படுவதாக உறுதி செய்துள்ளது. இருப்பினும், அதன் கொள்கை இயக்குநர், “லட்சக்கணக்கான இளம் வயதினரின் கணக்குகளை நீக்குவது என்பது பெரும் பொறியியல் மற்றும் வயது உறுதிப்படுத்தல் சவால்களை உள்ளடக்கிய ஒரு கடினமான பணியாகும்” என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
டிக்டாக் (TikTok): டிக்டாக்கின் ஆஸ்திரேலிய கொள்கை அதிகாரி, ’இந்தத் தடை இளம் பருவத்தினரை எந்தப் பாதுகாப்பும் இல்லாத இணையத்தின் இருண்ட மூலைகளுக்கு தள்ளிவிடும்’ என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஸ்னாப்சாட் (Snapchat): ஸ்னாப்சாட்டின் மூத்த துணை தலைவர், “நாங்கள் உடன்படவில்லை, ஆனால் நாங்கள் சட்டத்தை ஏற்றுக்கொள்வோம், அதற்கு கட்டுப்படுவோம்” என்று எதிர்ப்பு கலந்த சம்மதத்தைத் தெரிவித்துள்ளார்.
புதிய சட்டத்தின்படி, நிறுவனங்கள் ஒவ்வொரு பயனரின் வயதையும் சரிபார்க்க வேண்டியதில்லை என்றாலும், வயது குறைந்த பயனர்களை கண்டறிந்து செயலிழக்க செய்ய ‘நியாயமான நடவடிக்கைகளை’ எடுக்க வேண்டும்.
ஆஸ்திரேலியா எடுத்த இந்த டிஜிட்டல் நடவடிக்கை, வாஷிங்டன் முதல் பிரஸ்ஸல்ஸ் வரை உலகெங்கிலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களுக்கு எந்த வயது வரை மிக இளம் வயது? என்ற கேள்வியுடன் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மல்லுக்கட்டி வருகின்றன.
மேலும் இந்தியாவில் அரட்டை, உலா உள்ளிட்ட இந்திய தொழில்நுட்ப செயலிகள் பிரபலம் அடைந்து வரும் நிலையில், ஆஸ்திரேலியாவும் தனது நாட்டு மக்களுக்கு என சொந்தமாக சமூக ஊடக செயலிகளை வடிவமைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
