ஜகார்த்தா: இந்தோனேசியாவில் சமீப காலமாக போதைப்பொருள் பயன்பாடு பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், அங்கு சட்ட விரோத செயல்களும் அதிகளவில் நடந்து வருகின்றன. இந்த சூழலில் இந்தோனேசியாவில் சுமார் 44 ஆயிரம் சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதன்பின்னணி என்ன என்பதை பார்ப்போம்.
இந்தோனேசியாவில் சமீப காலமாக போதைப்பொருள் பயன்பாடும், சட்டவிரோத செயல்களும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்கின்றனர். அப்போது போதைப்பொருள் கடத்துபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
அதேபோல் அரசாங்கத்தை விமர்சித்த குற்றத்துக்காகவும் ஆயிரக்கணக்கானோர் கடந்த சில மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் சிறையில் அடைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.
எனவே சிறையில் கூட்ட நெரிசலை குறைக்க அந்நாட்டு அரசு விரும்புகிறது. அதன்படி சிறையில் உள்ள 44 ஆயிரம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. இது அந்த நாட்டின் மொத்த சிறை கைதிகளில் சுமார் 30 சதவீதம் என்று சொல்கிறார்கள்.
இதற்காக சிறையில் உள்ள கைதிகளின் குற்ற விவரங்கள் மற்றும் பெயர்ப்பட்டியலை அரசாங்கம் தயாரித்து வருகிறது. இந்த பட்டியல் அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பின்னர் அவரது ஒப்புதல் பெற்று கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என்றும் அந்நாட்டு மனித உரிமைகள் விவகாரத்துறை அமைச்சர் நடாலியஸ் பிகாய் தெரிவித்தார். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி கொடுக்க தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.