அமெரிக்காவில் வேலைவாய்ப்பு வளர்ச்சி மந்தமடைந்துள்ளதும், வேலையின்மை விகிதம் அதிகரித்திருப்பதும் அந்நாட்டின் பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்குத் தள்ளி வருகிறது. இதன் விளைவாக, பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளே இந்த நிலைக்குக் காரணம் என விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சமீபத்தில் வெளியான வேலைவாய்ப்பு அறிக்கை, அமெரிக்க பொருளாதாரத்தின் தேக்கநிலையை உறுதிப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 22,000 புதிய வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டன. அதே சமயம், வேலையின்மை விகிதம் 4.3% ஆக உயர்ந்து, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச நிலையை எட்டியுள்ளது.
இந்த மோசமான அறிக்கை, பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. டவ் ஜோன்ஸ், எஸ்&பி 500 போன்ற முக்கிய குறியீடுகள் சரிந்தன. உற்பத்தி துறையில் வேலைகள் தொடர்ந்து நான்காவது மாதமாக சரிந்து வருவது, இந்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக கொள்கைகள் மற்றும் வரிவிதிப்புகள், இந்த பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.
அமெரிக்கா விதித்துள்ள அதிகபட்ச வரிகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகத்தைப்பாதித்து, உற்பத்தி நிறுவனங்களின் லாபத்தை குறைத்துள்ளன. இதன் விளைவாக, வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் பொருளாதாரம் படிப்படியாக வலுவிழந்து, விலைவாசி உயர்வு விண்ணை தொட்டுள்ளது. இதனால், நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைந்து, ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார நிச்சயமற்ற தன்மை, மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. சமூக ஊடகங்களில் டிரம்ப் கொள்கைகளை மக்கள் வெளிப்படையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மக்கள் தாங்கள் பார்த்து கொண்டிருக்கும் வேலைகளைக்கூட, இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் இறுக்கமாக பிடித்துக்கொண்டிருப்பதாக கூறுகின்றனர். இது, தொழிலாளர் சந்தை குறித்து மக்களிடையே நிலவும் பாதுகாப்பற்ற தன்மையைக் காட்டுகிறது.
புதிய வேலைவாய்ப்புகள் இல்லாததாலும், ஏற்கனவே வேலையில் இருப்பவர்களும் வேலைநீக்கம் செய்யப்படுவதாலும், அமெரிக்காவில் வாழ்க்கை இனி நரகமாகிவிடுமோ என்ற கவலை மக்களிடையே நிலவி வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
