அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு நுகர்வோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, சமீபத்திய பணவீக்க அறிக்கையின்படி முட்டை விலை 15% அதிகரித்துள்ளது. ஒரு டஜன் முட்டையின் விலை $4-ஐ தாண்டியுள்ள நிலையில், அமெரிக்க விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட மில்லியன் கணக்கான முட்டைகள் அழிக்கப்படும் முரண்பாடு எழுந்துள்ளது.
விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுவது, கோழி பண்ணைகளை தாக்கி வரும் பறவைக் காய்ச்சல் ஆகும். இதுவரையில், முட்டையிடும் சுமார் 38 மில்லியனுக்கும் அதிகமான கோழிகள் கொல்லப்பட்டதால், முட்டை உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. உற்பத்தி குறைவால் செலவுகள் உயர்ந்தன.
2024 ஆம் ஆண்டில் கனடா, ஜப்பான் மற்றும் ஆசிய சந்தைகளுக்கு 172 மில்லியன் டஜன் முட்டைகளை ஏற்றுமதி செய்த அமெரிக்கா, 2025-ன் மத்தியில் நிலைதடுமாறியது. முட்டையின் விலை சில இடங்களில் $5.20 வரை விற்கப்படுகிறது.
உள்நாட்டு முட்டைகள் அதிக அளவில் அழிக்கப்படும்போது, சூப்பர் மார்க்கெட் அலமாரிகளில் பிரேசில் அல்லது துருக்கி போன்ற நாடுகளில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட முட்டைகள் நிறைந்துள்ளன. இந்த முரண்பாட்டின் மர்மம் இதுதான்:
2025 ஆம் ஆண்டில், உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்கப் போவதாக கூறி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மீது 25% வரை கடுமையான வர்த்தக வரிகள் விதிக்கப்பட்டன. இந்த வரிகளால் அமெரிக்க முட்டைகளை வாங்குவதை உலக நாடுகள் தவிர்த்தன. குறிப்பாக, அமெரிக்க முட்டையின் மிகப்பெரிய கொள்முதல் நாடுகளில் ஒன்றான கனடா, அமெரிக்காவில் முட்டை வாங்காமல் பிரேசில் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது.
இதன் விளைவாக, ஜூன் 2025-க்குள் அமெரிக்காவில் 6 கோடிக்கும் அதிகமான விற்கப்படாத முட்டைகள் கிடங்குகளில் தேங்கின. தேவை சரிவால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.
முட்டைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டு, மறுபுறம் அழியும் நிலைக்கு தள்ளப்படுவதற்கு முக்கியக் காரணம் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட சரிவுதான். போக்குவரத்து நெட்வொர்க்குகள், ஆய்வு அட்டவணைகள் மற்றும் ஏற்றுமதி சான்றிதழ்கள் அனைத்தும் மெதுவாக செயல்பட்டதால், முட்டைகள் வாடிக்கையாளர்களை சென்றடையவோ அல்லது வெளிநாட்டு சந்தையில் நுழையவோ முடியவில்லை.
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளுக்கு அதிக விலை கொடுத்து வாங்குவது, உள்நாட்டு முட்டைகள் அழிக்கப்படுவதை பற்றிய செய்திகளை கேள்விப்படுவது போன்ற முரண்பாடுகளால் நுகர்வோரின் நம்பிக்கை சிதைந்துள்ளது. பர்தூ பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, பதிலளித்தவர்களில் 68% பேருக்கு இந்தச் சிக்கல் ஏன் ஏற்படுகிறது என்பது புரியவில்லை.
ஏற்கனவே அமெரிக்கா பல துறைகளில் சோதனைகளை சந்தித்து வரும் நிலையில் தற்போது முட்டை உற்பத்தியாளர்களின் பிரச்சனை மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
