பிரபல தொழில்திபர் எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான xAI, ஆப்பிள் மற்றும் ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI ஆகிய நிறுவனங்கள் மீது, செயற்கை நுண்ணறிவு துறையில் போட்டியாளர்களை தடுப்பதற்காக சட்டவிரோதமாக சதி செய்ததாக அமெரிக்க மத்திய நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.
வழக்கின்படி, ஆப்பிள் மற்றும் OpenAI நிறுவனங்கள், “தங்களது ஏகபோக உரிமைகளை தக்கவைத்துக்கொள்வதற்காகவும், X மற்றும் xAI போன்ற புதிய கண்டுபிடிப்பாளர்களை போட்டியிடுவதிலிருந்து தடுப்பதற்காகவும் சந்தைகளை முடக்கியுள்ளன” என்று xAI குற்றம் சாட்டுகிறது.
ஆப்பிள் நிறுவனம், OpenAI-உடன் ஒரு பிரத்யேக ஒப்பந்தம் செய்துகொண்டு, ChatGPT-ஐ தனது ஐபோன், ஐபாட் மற்றும் மேக் சாதனங்களின் இயக்க அனுமதி அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் இல்லையென்றால், ஆப்பிள் தனது ஆப் ஸ்டோரில் X மற்றும் Grok செயலிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருக்க எந்த காரணமும் இல்லை என்றும் அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில், xAI நிறுவனம் பில்லியன் கணக்கான டாலர்களை இழப்பீடாக கோரியுள்ளது.
இந்த வழக்கை தொடர்ந்து, OpenAI-ன் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “இந்த வழக்கு, மஸ்க்கின் தொடர்ச்சியான தொல்லைகளில் ஒன்று என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
மஸ்க், தனது சமூக ஊடக தளமான X-ல், “க்ரோக் செயலிக்கு 4.9 சராசரி மதிப்பீட்டுடன் ஒரு மில்லியன் விமர்சனங்கள் இருந்தாலும், ஆப்பிள் எந்த பட்டியலிலும் அதை குறிப்பிட மறுக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். “ஆப்பிளின் இத்தகைய நடத்தை, OpenAI தவிர வேறு எந்த AI நிறுவனமும் ஆப் ஸ்டோரில் முதல் இடத்தை பிடிப்பதை இயலாததாக்குகிறது” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்,
இந்த வழக்கு, நீதிமன்றங்கள் AI சந்தையை எவ்வாறு மதிப்பிடும் என்பதை சோதிக்க ஒரு முதல் வாய்ப்பாக அமையும். இந்த வழக்கு, நீதிமன்றங்கள் எதிர்காலத்தில் AI மற்றும் ஏகபோக உரிமை வழக்குகளை எவ்வாறு கையாளும் என்பதை காட்டும் என்றும் ஒரு சட்ட வல்லுனர் ஒருவர் கூறியுள்ளார்.
மஸ்க், OpenAI நிறுவனத்தை ஒரு லாப நோக்கற்ற நிறுவனத்திலிருந்து லாப நோக்கம் கொண்ட நிறுவனமாக மாற்றியதற்காக, அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது கலிபோர்னியா மத்திய நீதிமன்றத்தில் தனியாக ஏற்கனவே ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார் என்பதும், அதேபோல் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் நடைமுறைகள் குறித்து ஏற்கனவே சில வழக்குகள் விசாரணையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
