ஐ.நா. பயணத் தடை நீக்கம்: தலிபான் வெளியுறவு அமைச்சர் முத்தகி அடுத்த வாரம் இந்தியா வருகை – ஜெய்சங்கருடன் முக்கியப் பேச்சுவார்த்தை
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தகி அவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலால் விதிக்கப்பட்டிருந்த பயண தடையிலிருந்து விலக்கு பெற்றதை தொடர்ந்து, அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுடன் அமீர்கான் முத்தகி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பு, ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறவுள்ள மிகவும் முக்கியமான இராஜதந்திர பேச்சுவார்த்தையாகும்.
அமீர் கான் முத்தகி உட்படத் தலிபான் தலைவர்கள் பலர், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பிற காரணங்களுக்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடைகள் பட்டியலில் உள்ளனர். இதன் காரணமாக, அவர்கள் சர்வதேச பயணங்களை மேற்கொள்ள ஐ.நா.வின் சிறப்பு அனுமதி தேவைப்படுகிறது.
அமீர்கான் முத்தகி, கடந்த செப்டம்பர் மாதமே இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் ஐ.நா. பயண தடையிலிருந்து விலக்கு பெற தவறியதால், அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. அப்போதைய செய்திகளின்படி, நிரந்தரம் அல்லாத உறுப்பினராக இருந்த பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், முத்தகிக்கு சலுகை அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
இந்த சூழலில், தற்போது ஐ.நா. விலக்கு கிடைத்திருப்பது, பிராந்திய விவகாரங்களில் இந்தியாவின் இராஜதந்திர முயற்சிகள் வெற்றியடைந்திருப்பதை குறிக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள முக்கிய உறுப்பினர்கள், ஆப்கானிஸ்தானில் நிலையான பேச்சுவார்த்தையின் தேவையை உணர்ந்து இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர் என்பதை இது உணர்த்துகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கத்தை இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், காபூலில் உள்ள மக்களுடனான தனது தொடர்பை துண்டிக்க விரும்பவில்லை. இந்த சந்திப்பின் பிரதான நோக்கங்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்திய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உறவுகளை சுற்றியே இருக்கும்.
பயங்கரவாத அச்சுறுத்தல்கள் ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து, குறிப்பாக பாகிஸ்தானை மையமாக கொண்ட பயங்கரவாத குழுக்களால் இந்தியாவுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுப்பது குறித்துத் தலிபானுடன் பேசுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருக்கும்.
ஆப்கானிஸ்தானில் நிலவும் கடும் உணவு மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள, இந்தியா தொடர்ந்து வழங்கி வரும் மனிதாபிமான உதவிகள் மற்றும் அதனை விநியோகிப்பதற்கான வழிகள் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மீது ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்தியிருக்கும்.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் முக்கியமாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் ஆகியவற்றை பாதுகாக்குமாறு இந்தியா வலியுறுத்தக்கூடும். விமான போக்குவரத்து மற்றும் பிற வர்த்தக வழிகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளை மீண்டும் வலுப்படுத்துவது குறித்து ஆராயப்படும்.
ஆப்கானிஸ்தான் இந்தியாவின் மிக முக்கியமான அண்டை நாடுகளில் ஒன்றாகும். அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாதது, இந்தியாவின் பாதுகாப்புக்கும், மத்திய ஆசிய நாடுகளுடனான இணைப்புத் திட்டங்களுக்கும் அச்சுறுத்தலாகும்.
எனவே, இந்தியா தலிபானுடன் நேரடி தொடர்பை பேணுவது, பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்துவது, பயங்கரவாதத்தை ஒடுக்குவது மற்றும் ஆப்கானிய மக்களின் நலனை உறுதி செய்வது ஆகிய பல்முனை இலக்குகளை உள்ளடக்கியதாக இந்த சந்திப்பு அமையும்.
மேலும் பாக்ராம் பகுதியில் அமெரிக்கா ராணுவ தளத்தை அமைக்க முயற்சித்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சீனாவுக்கு ராணுவ தளம் அமைப்பதற்கு அனுமதி வழங்குவதற்கு பதில் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் இந்தியாவுக்கு ராணுவத்தளம் அமைக்க ஒரு வாய்ப்பும் உள்ளது.
மொத்தத்தில் அமீர்கான் முத்தகி – ஜெய்சங்கர் சந்திப்பு, வரும் வாரங்களில் உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
