அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க கூட்டாண்மை உறவின் மதிப்பை பாராட்டி அங்கீகரிக்கும் இரு கட்சி தீர்மானம் ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளி அமி பேரா மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த ஜோ வில்சன் ஆகியோர் இணைந்து இந்த தீர்மானத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தீர்மானம், உலகின் மிகப்பெரிய இரண்டு ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, தொழில்நுட்பம், வர்த்தகம், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கல்வி உட்பட பல்வேறு முக்கிய துறைகளில் பத்தாண்டுகளாக அடைந்து வரும் ஒத்துழைப்பை வலியுறுத்துகிறது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் சுதந்திரமான, இந்தோ-பசிபிக் பகுதியை ஊக்குவிப்பதில் இந்தியாவின் முக்கிய பங்கையும் இத்தீர்மானம் எடுத்துரைக்கிறது.
அமெரிக்காவில் கடந்த பல ஆண்டுகளாக பதவியிலிருந்த அதிபர்களான கிளிண்டன், புஷ், ஒபாமா, டிரம்ப், மற்றும் பிடன் ஆகியோர்களின் நிர்வாகங்களின் கீழ், இந்தியாவுடனான கூட்டாண்மையை வலுப்படுத்துவது அமெரிக்காவின் கொள்கையாக இருந்து வருகிறது என்பதை இந்த தீர்மானம் சுட்டி காட்டுகிறது.
இந்த கூட்டாண்மைப் பின்வரும் அம்சங்களை அங்கீகரிக்கிறது:
பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு இந்தியா இன்றியமையாதது.
ஜனநாயக ஆட்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் பொதுவான பிராந்திய இலக்குகளுக்கு இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது.
பயங்கரவாத எதிர்ப்பு, இணைய அச்சுறுத்தல்கள் முதல் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் வரை, 21-ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளும் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்று இத்தீர்மானம் அழைப்பு விடுக்கிறது.
இந்தத் தீர்மானம் இரு கட்சிகளிடமிருந்தும் அதாவது ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டின் வலுவான ஆதரவை பெற்றுள்ளது. மேலும், இந்திய அமெரிக்கர்கள் மூலம் வலுவடைந்து வரும் இரு நாடுகளின் நீடித்த மக்கள் இடையேயான உறவுகளையும் இத்தீர்மானம் அங்கீகரிக்கிறது.
இந்த தீர்மானத்தை ஆரம்பத்தில் கொண்டு வந்த அமி பேரா மற்றும் ஜோ வில்சன் உடன் சேர்த்து, சிட்னி காம்லேகர்-டோவ் , ரிச் மெக்கார்மிக் , ராஜா கிருஷ்ணமூர்த்தி உட்பட மொத்தம் 24 காங்கிரஸ் உறுப்பினர்கள் இணைந்து இதனை ஆதரித்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
