அமெரிக்காவில் 35 ஆண்டுகளாக வாழ்ந்த கொலம்பியா நாட்டு தம்பதிகள், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற குற்றச்சாட்டு காரணமாக நாடுகடத்தப்பட்டனர். ஆனால், அதே நேரத்தில், அவர்களுடைய மூன்று மகள்களுக்கு அமெரிக்க குடியுரிமை இருப்பதால், அவர்கள் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்பட்டதாகவும், தங்கள் பெற்றோரை கண்ணீருடன் வழியனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியா நாட்டைச் சேர்ந்த தம்பதிகள், 1989 ஆம் ஆண்டு சட்டப்படி அனுமதி இல்லாமல் அமெரிக்கா வந்தனர். அகதி பாதுகாப்புக்காக விண்ணப்பித்த அவர்களது விண்ணப்பம், 1998 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் அவர்கள் தோன்ற தவறியதன் காரணமாக நிராகரிக்கப்பட்டது. அதன் பிறகு, நீதிமன்றம் மூலமாக அவர்கள் அமெரிக்காவில் தொடர்ந்து தங்கி இருக்க பல சட்ட நடைமுறைகளை தேடிக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்காக அழைக்கப்பட்ட தம்பதிகள் கைது செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் மார்ச் 18 ஆம் தேதி கொலம்பியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தம்பதியின் மூன்று மகள்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதால், அவர்கள் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் பெற்றோரை மூன்று மகள்களும் கண்ணீருடன் வழியனுப்பினர்.
இதுகுறித்து மகள்கள் கூறியதாவது: “எங்கள் பெற்றோர்கள், வெளிநாட்டு துறை அதிகாரிகளின் அனைத்து விசாரணைகளுக்கும் ஒத்துழைத்தனர். அவர்களின் கைது மற்றும் நாடுகடத்தல் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பல ஆண்டுகளாக அவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்திருக்கிறார்கள், மூன்று மகள்களை பெற்றெடுத்திருக்கிறார்கள், சமீபத்தில் பேரக்குழந்தையையும் பார்த்திருக்கிறார்கள். எந்தவிதமான சட்டவிரோத செயல்களையும் செய்யவில்லை. மேலும், அமெரிக்காவுக்கு அவர்கள் 35 ஆண்டுகளாக சேவை செய்துள்ளனர். தற்போது அவர்கள் குற்றவாளிகள் போல் நடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டுள்ளர். இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து சட்டவிரோதமாக தங்கிய வெளிநாட்டினர் தொடர்ச்சியாக நாடுகடத்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.